தமிழ்நாடு அரசின் முக்கிய டிஜிட்டல் முன்னேற்ற திட்டமான "உலகம் உங்கள் கையில்" முதல் கட்டம் ஜனவரி 5ஆம் தேதி தொடங்க உள்ளது. முதலமைச்சர் முக.ஸ்டாலின் இந்த திட்டத்தை சென்னை வர்த்தக மையத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கி வைக்கிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இந்நிகழ்வில் கலந்துக்கொள் உள்ளார்.
இத்திட்டம் 2 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிட்டுள்ள தமிழ்நாடு அரசு, முதல் கட்டத்தில் அரசு நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 10 லட்சம் லேப்டாப் வழங்கப்படும். இதில் அரசு பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், வேளாண்மை பல்கலைக்கழகங்கள், சட்ட கல்லூரிகள், பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் (ITI) ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் அடங்குவர்.

இது இரு கட்ட திட்டத்தின் முதல் பகுதியாகும், இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 20 லட்சம் லேப்டாப் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் டிஜிட்டல் தொழில்நுட்ப நுகர்வு மற்றும் திறனில் அரசு கல்லூரி மாணவர்கள் மத்தியில் இருக்கும் வித்தியாசத்தை குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் தொழில்நுட்ப உலகில் பின்தங்காமல் இருக்க இந்த விலையில்லா லேப்டாப் திட்டம் உதவும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு துறைகள் தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்துள்ள இன்றைய தொழில்நுட்ப உலகில், மாணவர்களுக்கு சம வாய்ப்பை உருவாக்கும் என்று தமிழ்நாடு அரசு வெளியீட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரசு வழங்கும் விலையில்லா லேப்டாப்-கள் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்ல, வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் உதவும். டிஜிட்டல் திறன் மேம்பாடு மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பம், சாப்ட்வேர் டெவலப்மென்ட், டேட்டா என்டரி, டிஜிட்டல் மார்கெட்டிங், கிராபிக் டிசைன், கோடிங், வெப் டிசைன், செயற்கை நுண்ணறிவு, ப்ரீலான்சிங் போன்ற துறைகளில் திறன் பெறலாம். இது சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு நேரடி உதவியாக அமையும் என்று அரசு கூறுகிறது.
இந்த திட்டம் மாணவர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும். டிஜிட்டல் உலகில் போட்டியிட தயாராக்கும் இது அரசின் மக்கள் நல திட்டங்களில் முக்கியமானது.
மேலும் இந்த லேப்டாப்-ல் 6 மாதத்திற்கான Perplexity Pro ஏஐ கருவிக்கான சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications