லட்சங்களில் லாபம் பார்த்து, கோடிகளில் டர்ன் ஓவர் செய்து கொண்டிருக்கும் ஒரு சில நிறுவனங்களுக்கே வராத ஜிஎஸ்டி நோட்டீஸ், சாதாரண ஆடு மேய்க்கும் விவசாயிக்கு வந்திருக்கிறது. அதுவும் எவ்வளவு தெரியுமா? தொகையைக் கேட்டால் தலையே சுற்றும். சுமார் ரூ.2.47 கோடி. தன் வாழ்நாளில் இவ்வளவு பெரிய தொகையை பார்த்திடாத அந்த விவசாயிக்கு நோட்டீஸை பார்த்ததும் மினி ஹார்ட் அட்டாக்கே வந்துள்ளது. இந்த சம்பவம் எப்படி நடந்தது? எதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டது? என்ற விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இருக்கும் மொட்டூர் கிராமத்தில் வசிப்பவர் செல்வராஜ். இவருக்கு 32 வயதான பிரபாகர் என்ற மகன் உள்ளார். மொட்டூரில் சாதாரண தகர வீட்டில் தந்தை, மகன், தங்கள் குடும்பத்தினரோடு வசித்து வருகின்றனர். சிறிய அளவில் விவசாயம் செய்து கொண்டு, ஆடு, மாடு வளர்த்து அன்றாட பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்துள்ளது. அம்பூர் வட்டார ஜிஎஸ்டி உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து வந்திருந்த அந்த நோட்டீஸில், "2024 ஆம் நிதியாண்டிற்கு செலுத்தப்படாத வரி மற்றும் அபராதங்கள் சேர்த்து ரூ.2.47 கோடி செலுத்த வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
நோட்டீஸை படித்து பார்த்ததும் பிரபாகருக்கு ஒன்றுமே புரியவில்லை. பயந்து போன அவர் உடனடியாக அம்பூர் ஜிஎஸ்டி அலுவலகத்திற்கு விரைந்து ஓடினார். அங்குள்ள அதிகாரிகளிடம் பிரபாகர், "நான் சாதாரண ஆடு,மாடு மேய்க்கும் தொழிலாளி. எனக்கும் கோடிகளுக்கும் சம்பந்தமே இல்லை. எனக்கு எப்படி இது போன்ற நோட்டீஸ் வந்ததென்று தெரியவில்லை", என முறையிட்டார். அப்போதுதான் அதிகாரிகளுக்கு விஷயம் என்னவென்று தெரிய வந்தது.

சமீபகாலமாக நடக்கும் அடையாள திருட்டுதான் பிரபாகருக்கும் நடந்துள்ளது. மோசடிக்காரர்கள் பிரபாகரின் ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற அடையாள ஆவணங்களைத் திருடி அவருக்கு தெரியாமலேயே, அவருடைய பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கி கோடிகளில் பிசினஸ் செய்திருக்கின்றனர். அதற்கு ராஜு டிரேடர்ஸ் என்ற பெயரையும் வைத்திருக்கின்றனர். இதை கண்டுபிடித்த ஜிஎஸ்டி அதிகாரிகள் உடனடியாக பிரபாகரிடம் ஆங்கிலத்தில் இதை "ஐடென்டிட்டி தெப்ட்" என்று கூறுவார்கள். அதாவது ஒரு நபரைப் போலவே ஆள் மாறாட்டம் செய்து மோசடி செய்வது தான் இந்த ஐடென்டிட்டி தெப்ட். நீங்கள் உடனே போலீசில் புகார் கொடுங்கள் என்று கூறியுள்ளனர். பிரபாகர் உடனடியாக அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
பிரபாகர் போலீசில் கொடுத்த புகாரில், "நான் ஒரு சாதாரண கூலி தொழிலாளி .இன்னமும் தகர வீட்டில் தான் வாழ்க்கை நடத்தி வருகிறேன். என்னால் எப்படி கோடி கணக்கில் பிசினஸ் செய்ய முடியும். யாரோ என்னுடைய ஆவணங்களைத் திருடி மோசடியான முறையில் ஜிஎஸ்டி நம்பர் பதிவு செய்துள்ளனர். நோட்டீஸ் வந்ததில் இருந்து எனக்கும் சரி, என் குடும்பத்திற்கும் சரி நிம்மதியே இல்லை. யாரோ ஒருவர் செய்த குற்றத்திற்கு நான் சட்ட ரீதியாக பொறுப்பேற்க வேண்டுமோ? என்ற கவலை வந்துவிட்டது", என கூறி புகார் அளித்தார். அதோடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பிரபாகரின் புகாரின் பேரில், மோசடிக்காரர்கள் எப்படி தனிப்பட்ட விவரங்களை பெற்று போலியாக நிறுவனத்தை உருவாக்கினர் என்பதை கண்டுபிடிக்க போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பிரபாகரை போன்று இதற்கு முன்னரும் பலருக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒருவரின் ஆதார் நம்பர், பான் நம்பர் போன்ற விவரங்களை மட்டுமே வைத்து போலியாக ஜிஎஸ்டி நம்பர் உருவாக்கி, அதில் கோடி கோடியாக வருமானம் பார்த்துவிட்டு, பின்னர் அப்பாவி மக்களின் தலையில் பழியை தூக்கி போடுகின்றனர், இதற்காகத்தான் உங்களுடைய அடையாள ஆவணங்களை யாரிடமும் பகிரக்கூடாது என்று சொல்லப்படுகிறது.
டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி யாருக்கு உதவியாக இருக்கிறதோ இல்லையோ, மோசடிகாரர்களுக்கு உற்ற தோழனாய் மாறியுள்ளது. சமீப காலமாக நடக்கும் மோசடி சம்பவங்கள் ஏராளம். எனவே மக்கள் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க தங்களுடைய அக்கவுண்ட் நம்பர், அடையாள ஆவணங்கள் மற்றும் பின் நம்பர் ஆகியவற்றை யாரிடமும் பகிராமல் இருக்க வேண்டும். ஒரு வேலை இது போன்ற சம்பவங்கள் நடந்தாலும் உடனடியாக போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும். இது போன்ற பதிவைப் படிக்கும் போது உங்களுடைய குடும்பத்தினரிடமும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!


Click it and Unblock the Notifications