அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு-க்கு சொந்தமான சென்னை மறைமலைநகரில் உள்ள அதன் உற்பத்தி ஆலையை இயக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) அனுமதி வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த அனுமதி, ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தி செயல்பாடுகளை இத்தொழிற்சாலையில் மீண்டும் துவங்க அனுமதிக்கும், இதன் மூலம் தொழிற்சாலையில் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டு கார் உற்பத்தியும், ஏற்றுமதியும் துவங்கும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஃபோர்டு நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவதற்கு முன், ஆலையின் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் சூழல் பாதுகாப்பு திட்டங்களை கவனமாக ஆய்வு செய்துள்ளது.

அமெரிக்காவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான ஃபோர்டு, இந்தியச் சந்தையில் மீண்டும் நுழைய தயாராகி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தனது உற்பத்திப் பணிகளை மீண்டும் துவங்கும் முடிவில் உள்ளது. இந்த முடிவுக்கு முக்கிய காரணம், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கப் பயணத்தின் போது நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தான்.
இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் சென்னை மறைமலைநகரில் உள்ள தனது தொழிற்சாலையை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. சென்னையில் உள்ள திறமையான தொழிலாளர்களைப் பயன்படுத்தி, இந்தத் தொழிற்சாலை முதன்மையாக ஏற்றுமதிக்காக மறுசீரமைக்கப்பட உள்ளது.
ஃபோர்டின் சர்வதேச சந்தை குழுவின் தலைவர் கே. ஹார்ட் கூறுகையில், சென்னையில் உள்ள தொழிற்சாலையில் எந்த வகையான கார் தயாரிக்கப்படும் மற்றும் எந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்பது குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றார்.
இதற்கிடையில், ஃபோர்டின் டெக் மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவான Ford Business Solutions நிறுவனத்தில் ஏற்கனவே 12,000 பேர் பணியாற்றி வருகின்றனர். அடுத்த மூன்று ஆண்டுகளில் இன்னும் 2,500 முதல் 3,000 பேரை வேலைக்கு அமர்த்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, இந்தியாவின் கார் உற்பத்தித் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது. குறிப்பாக, 2021-ம் ஆண்டு இந்தியச் சந்தையை விட்டு வெளியேறிய ஃபோர்டு, தற்போது தனது சென்னை தொழிற்சாலையை மையமாகக் கொண்டு உலகளாவிய சந்தைகளை கைப்பற்றும் திட்டத்துடன் உள்ளது. இது, இந்தியாவின் திறன்மிக்க தொழிலாளர்கள் மீதான ஃபோர்டின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications