சமீப காலமாக ரேஷன் கார்டுகளை மோசடியாக பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டின் ஜூலை மாதம் முதல் தமிழக அரசிடம் 2.65 லட்சம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 1.36 லட்சம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளன. மாநில சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஒரே வீட்டில் வசிக்கும் நபர்கள் ரேஷன் கார்டுகள் பெற விண்ணப்பித்ததனால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டுகளில் இருந்து பெயர்களை நீக்க வேண்டியது அவசியமாகும். உதாரணமாக திருமணத்திற்கு பிறகு ஒருவர் வீட்டை விட்டு வெளியேறும் போது அவருடைய பெற்றோரின் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம் செய்யப்பட வேண்டும். அதோடு திருமண பதிவு சான்றிதழ்களும் புதிதாக திருமணமாகி ரேஷன் கார்டு பெறுபவர்களுக்கு முக்கியம்.

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு, பண உதவி, வெள்ள நிவாரண நிதி மற்றும் இதர அரசாங்க சலுகைகள் கிடைக்கின்றன. இதை தவறான நோக்கில் பயன்படுத்தும் பொருட்டு சிலர் ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம் செய்யப்படாமலேயே பதிவு செய்து ரேஷன் கார்டு பெற முயற்சிக்கின்றனர். இதைத் தடுக்கும் பொருட்டு தற்போது இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதோடு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சில விண்ணப்பதாரர்கள்.. அதுவும் தனித்தனி எல்பிஜி இணைப்பு இல்லாதவர்கள் புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்கள் சொந்தமாக சமையலறை இல்லாமலோ அல்லது ஒரே வீட்டில் வசிப்பவராக இருந்தாலோ மட்டுமே புதிய ரேஷன் கார்டு பெறுவதை நிராகரிக்க முடியும். வேறு எந்த காரணத்திற்காகவும் ரேஷன் கார்டுகளை நீராகரிக்க முடியாது என்று சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையரான டி.மோகன் தெரிவித்துள்ளார்.
மொத்தமாக பெறப்பட்ட 4.26 லட்சம் விண்ணப்பங்களில் 1.99 லட்சம் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விண்ணப்பங்கள் சரிபார்ப்பில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்வதற்காகவும் பல்வேறு விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. 2023-ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்குவதற்கு முன்பு சில முரண்பாடுகளை தவிர்க்க புதிய ரேஷன் கார்டு வழங்குவதை அரசு நிறுத்தி வைத்திருந்தது. அதன் பிறகு மீண்டும் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. தற்போதைய தரவுகளின் படி தமிழகத்தில் 2.25 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 16.3 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications