மதுரை: தமிழ்நாடு அரசு தூத்துக்குடி, ஓசூர், கோவையை தொடர்ந்து மதுரையில் TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்த மாநாட்டில் 50000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மதுரை முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 35,560.15 கோடி ரூபாய் முதலீட்டில் 52,060 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 46 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், ரூ.1,100.20 கோடி முதலீட்டில் 4,706 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 45 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், என மொத்தம். ரூ.36,660.35 கோடி முதலீட்டில் 56,766 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

குறிப்பாக புதிதாக கட்டப்படும் மேலூர் சிப்காட்டில் Pei Hai என்ற நிறுவனம் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி ஆலையை நிறுவ ஒப்பந்தம் செய்தது. இதன்மூலம். 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். முன்னதாக இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வுவாக சிப்காட் மேலூர் தொழிற்பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிலையில் பாரம்பரியம் மற்றும் புதிய வாய்ப்புகள் இணையும் முன்னோடியான நகரமாக மதுரை வளர்ச்சி பெறவேண்டும் என்ற வகையில், 42 லட்சம் மக்கள்தொகையை எதிர்நோக்கி, நகர ஊரமைப்பு இயக்ககம் (DTCP) தயாரித்துள்ள "மதுரை மாஸ்டர் பிளான் 2044"ஐ முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்நாடு பொம்மைகள் உற்பத்திக் கொள்கை 2025 ஐ முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை மாநாட்டில் வெளியிட்டார். உயர்தர பொம்மைகள் உற்பத்தியில் தமிழ்நாட்டை முன்னணி மையமாக மேம்படுத்தும் வகையிலும், விளாச்சேரி, தஞ்சாவூர், அம்பாசமுத்திரம் போன்ற பகுதிகளில் உள்ள கைவினைக் கலைஞர்களின் பாரம்பரிய பொம்மைகள் உற்பத்தித்திறனை உயர்த்தும் வகையிலும், அவர்களுக்கு புதிய சந்தை, வடிவமைப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையிலும், இந்த கொள்கை அமைந்துள்ளது.
பின்னர் ஐந்து தொழில் நிறுவனங்களின் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து 11,83,000 கோடி ரூபாய் உறுதி அளிக்கப்பட்ட முதலீடுகளை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். 34 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்திருக்கிறோம் என்றும் ஒப்பந்தங்கள் செய்வதோடு வேலை முடிந்து விட்டது என இல்லாமல் அனைத்து துறைகளையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்வதை வழக்கமாக நான் வைத்திருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார் .
புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் 80% நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு அவுட்புட் காண்பித்தது இல்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக, மதுரை மாவட்டம், சிவகங்கை சாலை மேலமடை சந்திப்பு பகுதியில் 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 வழித்தடச் சாலை சந்திப்பு மேம்பாலத்திற்கு "வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்" என்று பெயர் சூட்டினார். மதுரையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.130 கோடியில் புதிய சாலை அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.


Click it and Unblock the Notifications