சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் தன்னுடைய ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் மாநிலம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது.

பொதுவாக இவ்வாறு ஒப்பந்த புள்ளி கோரப்படும் போது குறைந்த அளவிலான தொகைக்கு ஒப்பந்தம் கோரும் நிறுவனத்திற்கே அந்த ஒப்பந்தமானது கிடைக்கும். அந்த வகையில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்காக பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்தாலும் அதானி குழுமத்துக்கு சொந்தமான அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் கோரியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.எனவே அதானி குடும்பத்திற்கு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கான ஒப்பந்தம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
இருந்தாலும் எந்த நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் கிடைக்கும் என்பதற்கான அதிகாரப்பூர்வ முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. Revamped Distribution Sector Scheme என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதியுதவியுடன் நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் மின்சார கட்டணம் துல்லியமாக கணக்கீடு செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தான் அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட் மீட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மின்சார வாரியம் மூன்று கோடி ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவது என திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே கோரப்பட்டது. இதன்படி நான்கு கட்டங்களாக மூன்று கோடி ஸ்மார்ட் மீட்டர்களையும் நிறுவுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேக்கேஜிலும் 80 லட்சம் மீட்டர்கள் நிறுவும் வகையில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டன.
கடந்தாண்டிலேயே ஒப்பந்தம் கோரப்பட்டு நிறுவனங்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தாலும் இது தொடர்பான பல்வேறு சட்ட ரீதியான சிக்கல்கள் இருந்ததால் அதில் இறுதி முடிவு எடுப்பது தாமதமாகிவிட்டது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஒருவேளை இந்த ஒப்பந்தமானது அதானி குழுமத்திற்கு கிடைத்தால் அதானி குழுமம் ஸ்மார்ட் மீட்டர்களை வடிவமைப்பது மற்றும் நிறுவுவது அவற்றை செயல்படுத்துவது என அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும்.
அடுத்த 10 ஆண்டு காலத்திற்கு ஸ்மார்ட் மீட்டர்களை மேலாண்மை செய்யும் பொறுப்பு ஒப்பந்தம் பெறும் நிறுவனத்திடம் இருக்கும். இந்தியாவில் தற்போது மகாராஷ்டிரா, ஆந்திரா, உத்தரகண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் நிறுவும் திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டிலேயே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் தி நகர் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியம் 1.10 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவியது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications