நியூயார்க்: பொதுவாக இன்டர்ன்ஷிப் அல்லது வேலை வாய்ப்பு தேடி தங்களுடைய ரெஸ்யூமை அனுப்புபவர்கள் அந்த நிறுவனத்தின் முதலாளிகள் மற்றும் மேலாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக புதுமையான யுக்திகளை கையாளுகின்றனர்.
அப்படிப்பட்ட யுத்திகள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாவது உண்டு. அந்த வகையில் ஒரு நபர் தன்னுடைய வேலைக்கான விண்ணப்பத்தோடு சேர்த்து பீட்சாவையும் அனுப்பி வைத்திருக்கிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது Antimetal என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மேத்யூ பார்க்ஃபர்ஸ்ட் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார்.
அதில் இன்டர்ன்ஷிப் வேண்டி தன்னுடைய ரெஸ்யூமை அனுப்பி வைத்திருந்த விண்ணப்பதாரர் இதனுடன் லஞ்சமாக பீட்சாவையும் அனுப்பி வைத்துள்ளார் எனக் கூறியுள்ளார். தன்னுடைய ரெஸ்யூமுடன் கைகளால் எழுதப்பட்ட ஒரு குறிப்பையும் அந்த நபர் இணைத்து அனுப்பியுள்ளார்.
அதில் Antimetal நிறுவனத்தில் பொறியியல் துறையில் இன்டர்னாக பணிக்கு சேர வேண்டும் என்பதற்காகவே இந்த விண்ணப்பத்தை அனுப்பி வைப்பதாகவும், இந்த பீட்சாவை ஒரு லஞ்சமாக அனுப்பி வைக்கிறேன் என்றும் இதனை ஏற்றுக் கொண்டு என்னுடைய இணையதள பக்கத்தையும் அதில் நான் குறிப்பிட்டுள்ள என்னுடைய வேலைகள் சார்ந்த தகவல்களையும் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என எழுதி அனுப்பியிருக்கிறார்.
வேலை வேண்டியும் எங்களுடைய கவனத்தை பெறுவதற்காகவும் இவர் எடுத்துள்ள இந்த கூடுதல் முயற்சியை நான் பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ள மேத்யூ, 100% இவர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார் என்ற தகவலையும் பகிர்ந்துள்ளார்.
அந்த நபருக்கு வேலை கிடைக்குமா என்ற பயனாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், பலரும் இதற்காக விண்ணப்பம் செய்துள்ளதால் நேர்காணலின் அடிப்படையில் தான் முடிவெடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
புதுமையான முறையில் ரெஸ்யூம்களை அல்லது விண்ணப்பங்களை அனுப்பி நிறுவனங்களின் கவனத்தை ஈர்ப்பது தற்போது டிரெண்டாக உள்ளது. கிரியேட்டிவ்வான முறையில் விண்ணப்பம் செய்பவர்களும், மேலே குறிப்பிட்டதை போல நூதன முறையில் கவனத்தை ஈர்ப்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைப்பதும், அதனை தக்க வைத்து அந்த துறையில் வளர்ச்சி காண்பதும் அவர்களின் தனிப்பட்ட திறன் ஆகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications