கிர்கிஸ்தான் : இந்தியாவை பின்பற்றி, மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தான் பிரபல சமூகவலைதளமான டிக்டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. சீன நிறுவனமான பைட் டேன்ஸின் சமூகவலைதள செயலி டிக்டாக். வீடியோக்களை பகிரக்கூடிய இந்த செயலிக்கு பல்வேறு நாடுகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
டிக்டாக் செயலியால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும், குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் டிக்டாக் செயலி குழந்தைகளின் மன நலனில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டி கிர்கிஸ்தான் அரசு, செயலிக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிர்கிஸ்தான் நாட்டின் டிஜிட்டல் டெவெலப்மென்ட் அமைச்சகம் தங்கள் நாட்டில் செயல்படக்கூடிய டெலிகாம் ஆபரேட்டர்களுக்கு, டிக் டாக் செயலிக்கான அணுகலை வழங்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.
தேசிய நலனுக்கான கமிட்டி வெளியிட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் கிர்கிஸ்தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பது தெரியவந்துள்ளது . குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கிர்கிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் டிக் டாக் செயலியை அணுக முயற்சித்தபோது Unable to load என திரையில் காட்டப்படுவதாக அந்நாட்டு செய்தியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சீனாவை சேர்ந்த பைட் டேன்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதள செயலிதான் டிக் டாக். வீடியோ அடிப்படையிலான டிக் டாக் செயலி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு சமூக வலைதளமாக இருக்கிறது. ஆனால் டிக் டாக் செயலியால் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறி இந்தியாவில் இதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும் டிக்டாக் செயலிக்கு முழுவதுமாக தடை விதிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு இருக்கிறது.
டிக் டாக் செயலி மூலம் குழந்தைகளின் மனநலன் பாதிக்கப்படுவதாக கிர்கிஸ்தான் அரசு புகார் கூறியுள்ளது. தங்கள் நாட்டு அரசின் விதிமுறைகளை மதிக்காமல் பைட் டேன்ஸ் நிறுவனம் செயல்படுவதாக கிர்கிஸ்தான் அரசின் டிஜிட்டல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிக்டாக்கில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் குழந்தைகளின் மனநலம், உடல் நலம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், குழந்தைகளின் தார்மீக வளர்ச்சியில் இது பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கிர்கிஸ்தான் அரசு விளக்கம் தந்துள்ளது.
சீனாவுடன் எல்லையை பகிர்ந்து இருக்கும் கிர்கிஸ்தான் நாடு, அண்மை காலமாக அந்நாட்டுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. தற்போது டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது இரு நாட்டின் உறவு, குறிப்பாக பொருளாதார உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
டிக்டாக் செயலியை தடை செய்துள்ள கிர்கிஸ்தான் அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டுள்ளன. கிர்கிஸ்தான் அரசு பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குவதாகவும், உண்மையை வெளிக்கொண்டு வரும் செய்தியாளர்களை அச்சுறுத்துவதாகவும் அண்மை காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications