ஏப்ரல் 1 முதல், சென்னைக்கு அருகில் உள்ள இடங்களும் சேர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதல்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்றும் இந்த உயர்வு வாகன வகையைப் பொறுத்து, ரூ.5 முதல் ரூ. 25 வரை இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

அதன்படி சென்னையில் உள்ள வானகரம், சூரப்பட்டு, சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, தாம்பரம்-திண்டிவனம் நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடி உள்பட 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயருகிறது. இதனால் விலைவாசி உயர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த சுங்கச்சாவடி கட்டணங்கள், தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008 இன் கீழ் மொத்த விலை குறியீட்டின் (WPI) அடிப்படையில் ஆண்டுதோறும் திருத்தப்படுகின்றன.
சுங்கக் கட்டண உயர்வால் என்னென்ன தாக்கங்கள் ஏற்படும்? போக்குவரத்து செலவுகள் உயர்வு: அதிகரிக்கப்பட்ட சுங்கச்சாவடி கட்டணங்கள் போக்குவரத்து செலவுகளை அதிகரித்து, பொருளாதார விலைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்று வணிகர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். மஹாராஷ்டிராவிலிருந்து சென்னைக்கு ஒரு டிரக் பயணம் செய்தால், ரூ1,000 மற்றும் அதற்கு மேல் டோல் கட்டணங்கள் செலுத்தப்படுகின்றன.
இதற்கிடையில், கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் புதிய சுங்கக்கட்டணக் கொள்கை அறிவிக்கப்படும் என்றும், அதில் சாலைகளை பயன்படுத்துவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இருப்பினும், பொது நிதியுடன் கூடிய திட்டங்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது காலவரையின்றி தொடரும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, கடந்த ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாடு முழுவதும் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும் வகையில் சுங்கச்சாவடிகள் சீரமைக்கப்படும். கூடுதல் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
இந்தப் பணிகள் அனைத்தும் அடுத்த 3 மாதங்களில் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால், அதன்பின் மூன்றாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கான தொடக்கக்கட்ட நடவடிக்கைகளைக் கூட மத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மேற்கொள்ளவில்லை என்றும் அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தநிலையில்தான், புதிய சுங்கக்கட்டணக் கொள்கை குறித்த அறிவிப்பை நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications