சென்னை: தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணங்கள் உயர்கின்றன. இதனால் சென்னை முதல் பெங்களூர் மற்றும் மேற்கத்திய மற்றும் தென் மாவட்டங்களுக்கு செய்யும் பயணத்தின் கட்டணமும் உயரப்போகிறது.
வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் இருக்கும் 25க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 30 ரூபாய் முதல் 115 ரூபாய் கட்டணங்கள் உயர்வதாக அறிக்கை தெரிவிக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு சுங்க கட்டண விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்வதற்கு இதுவரை 430 ரூபாயை சுங்க கட்டணமாக செலுத்தியவர்கள் செப்டம்பர் 1 முதல் 460 ரூபாயாக செலுத்த வேண்டும்.
ஏற்கனவே சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் தொடர்ந்து கூறிவரும் நிலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் சுங்க கட்டணங்களை படிப்படியாக உயர்த்தி வருகிறது. இந்த சுங்க கட்டண உயர்வு தேவை இல்லாத ஒரு சுமையை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதாக இந்த துறையை சேர்ந்த செயற்பாட்டாளரான எஸ்.கமல் தெரிவித்துள்ளார்.
சென்னையை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்தாமல் அரைகுறையாக விடுத்து விட்டு ஆண்டுதோறும் சுங்க கட்டணங்களை மட்டும் உயர்த்துவது சரியா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
குறிப்பாக பருவமழை தொடங்க இருக்கும் நேரத்தில் பெரும்பாலான சாலைகள் சீரமைக்கப்படாமல் பாதியிலேயே விடுக்கப்பட்டுள்ளன , இப்படி இருக்கும் போது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் சுங்க கட்டணங்களை மற்றும் உயர்த்து உயர்த்துவது முறையல்ல என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
அதேவேளையில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலை பகுதியில் போதிய விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்காமல் ஆண்டுதோறும் சுங்க கட்டணங்களை மற்றும் உயர்த்துவது எப்படி நியாயமாகும் என சிங்கப்பெருமாள் கோயில் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் 4221 கோடி ரூபாய் சுங்க கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சமாக தொப்பூர் சுங்கச்சாவடியில் மட்டும் ஓர் ஆண்டுக்கு 269 கோடி ரூபாய் சுங்க கட்டணமாக வசூலாகிறது.
தற்போது சுங்க கட்டணங்கள் உயர்த்தப்பட்டு இருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் என்றும் தனியார் பேருந்து நிறுவனங்கள் தங்களின் டிக்கெட் விலையை உயர்த்தும் என்றும் சொல்லப்படுகிறது.
இதனிடைய சுங்கச்சாவடி அமைத்து சாலை பராமரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தாங்கள் இதுவரை இந்த சாலைகளை மேம்படுத்துவதற்காக செலவிட்ட தொகையில் 40 சதவீதத்தை கூட திரும்ப பெறவில்லை எனக் கூறுகின்றனர். இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் சுங்க கட்டணத்தை உயர்த்துவதாக விளக்கம் தருகின்றனர்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications