டெல்லி: இந்தியாவில் சுங்கச்சாவடி கட்டண முறை நீக்கப்பட்டு புதிய அமைப்பு நடைமுறைக்கு வரும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருந்தார். விரைவில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறைக்கு பதிலாக புதிய அமைப்புகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சுங்க கட்டணம் அதிகளவில் வசூலிக்கப்படுகிறது என்ற புகார்கள் வருகின்றன.

ஆனால் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு போக்குவரத்துக்கு எடுத்துக் கொள்ளும் காலம் என்பது வெகுவாக குறைந்துள்ளது, குறிப்பாக முன்பு மும்பையில் இருந்து பூனே செல்வதற்கு 9 மணி நேரம் ஆன நிலையில் நெடுஞ்சாலைகளை அமைத்ததன் மூலம் தற்போது 2 மணி நேரம் தான் ஆகிறது என தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் சுங்க கட்டண முறையை நீக்கி புதிய அமைப்பு நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளார்.
புதிய நடைமுறை ஜிபிஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு சுங்க கட்டண முறையாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. ஜிபிஎஸ் அடிப்படையில் என்றால் சுங்க கட்டணங்களை வசூலிப்பதற்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. அதாவது இனி வாகனம் ஓட்டுபவர்கள் சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டிய தேவை இருக்காது.
அவர்களது கணக்கிலிருந்து ஜிபிஎஸ் தொழில்நுட்ப மூலம் தானாக சுங்க கட்டணமானது கழிக்கப்படும். வாகனத்தில் உள்ள ஜிபிஎஸ்-ஐ கொண்டு வாகனம் செல்லும் தூரம் ஆகியவை கணக்கிடப்படும், இதனை அடுத்து அந்த வாகனத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் வங்கி கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை கழித்துக் கொள்ளும.
ஜிபிஎஸ் முறை நடைமுறைக்கு வருவதற்கு அனைத்து வாகனங்களிலும் புதிய நம்பர் பிளேட் பொருத்தப்பட வேண்டும். மேலும் இது ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
குறிப்பாக தானாகவே நம்பர் பிளேட்டுகளை படிக்கக்கூடிய கேமராக்கள் ஆங்காங்கே நெடுஞ்சாலைகளில் பொருத்தப்படும். இதன் மூலம் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட நம்பர் பிளேட்டுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு புதிய தொழில்நுட்ப முறையில் சுங்க கட்டணமானது வசூலிக்கப்படும்.
தற்போது ஃபாஸ்டேக் முறையில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சுங்க சாவடியில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கேனர்கள், வாகனங்கள் வந்த உடன் ஸ்கேன் செய்து பணத்தை கழித்துக் கொள்கிறது. ஆனால் ஜிபிஎஸ் திட்டமானது இந்த ஆட்டோமேட்டிக் ரீடர் கேமராக்கள் மூலம் வாகனம் பயணிக்கும் தொலைவு ஆகியவற்றை கணக்கீடு செய்து இந்த பணத்தை கழிக்கும்.
இந்தியாவில் சுமார் 1000 சுங்கச்சாவடிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. புதிய அமைப்பு செயல்பாட்டுக்கு வந்த உடன், சுங்கச்சாவடிகள் தேவை அற்றதாகிவிடும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications