சென்னை: வாகன ஓட்டிகளுக்கு பெரிய நிம்மதி அளிக்கும் வகையிலான ஒரு அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறைகளில் புதிய மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.
இதன்படி வாகன ஓட்டிகள் இனி குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் இதுநாள் வரை தாங்கள் செலுத்திய தொகையில் 50% வரையிலான தொகையை செலுத்தினாலே போதும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது . மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதி 2008இல் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. இதில் சுங்க கட்டணத்தை கணக்கீடு செய்வதற்கான ஒரு புதிய ஃபார்முலாவை அறிமுகம் செய்திருக்கிறது.

புதுப்பிக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த ஃபார்முலாவின் அடிப்படையில் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளில் இது நாள் வரை தாங்கள் செலுத்திய சுங்க கட்டணத்தில் பாதி கட்டணத்தை செலுத்தினாலே போதும். இது தொடர்பாக வெளியாகி இருக்கக்கூடிய அறிவிப்பின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் பாலங்கள், சுரங்கங்கள் போன்ற கட்டமைப்புகள் இருந்தால் அதற்கான சுங்க கட்டணம் கணக்கிடும் முறை மாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது மேம்பாலம், பாலம் சுரங்கம் போன்ற கட்டமைப்புகளின் மொத்த நீளத்தின் 10 மடங்கு மற்றும் நெடுஞ்சாலை பிரிவின் மொத்த நீளத்தின் 5 மடங்கு என்ற அளவில் கணக்கீடு செய்யப்படும். இதில் எது குறைவாக இருக்கிறதோ அதற்கு கட்டணம் செலுத்தினால் போதும். பொதுவாக தேசிய நெடுஞ்சாலைகளில் பாலம், மேம்பாலம், சுரங்கம் ஆகியவை இருந்தால் வழக்கமாக நாம் செலுத்தும் சுங்க கட்டணத்தில் இதன் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 10 மடங்கு அதிகமாக தான் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்படும்.
சுரங்கங்கள் ,பாலங்கள் அமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் அதிக செலவு ஆகிறது என கூறி இவ்வாறு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. இனி அது பாதியாக குறைந்துவிடும். அதாவது 40 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஒரு நெடுஞ்சாலை இருக்கிறது . அதில் முழுவதுமாகவே பாலங்கள் , மேம்பாலங்கள் அல்லது சுரங்கங்களாகவே நிறைந்திருக்கின்றன என்றால் இந்த சாலைக்கான சுங்க கட்டணம் என்பது இரண்டு விதங்களில் கணக்கிடப்படும் .
இந்த கட்டமைப்பின் மொத்த நீளத்தின் 10 மடங்கு அதாவது 400 கிலோ மீட்டராக கணக்கீடு கொள்ளப்படும் அல்லது மொத்த நெடுஞ்சாலையின் நீளத்தின் 5 மடங்கு அதாவது 200 கிலோ மீட்டராக கணக்கில் கொள்ளப்படும் . இந்த வகையில் பார்க்கும்போது இதில் குறைவான மதிப்பு 200 கிலோமீட்டர் என்பதால் சுங்க கட்டணம் என்பது இந்த 200 கிலோமீட்டருக்கு தான் செலுத்த வேண்டியிருக்கும் . எனவே பாதி அளவு சுங்க கட்டணம் குறைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications