தக்காளி விலை அடுத்த 2 வாரத்தில் குறையும், ஒரு வாரம் யாரும் வாங்காமல் இருந்தால் விலை குறையும் என பலர் பேசிய நிலையில் இந்திய தலைநகர் டெல்லியில் தக்காளி விலை மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஒரு கிலோ தக்காளி விலை 160, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் டெல்லியில் மதர் டெய்ரி நிறுவனத்தின் சாஃபல் ரீடைல் விற்பனை கடைகள் புதன்கிழமை ஒரு கிலோ தக்காளி 259 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்தியாவில் தக்காளி விளையும் முக்கிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் தக்காளி அளவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக தான் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை பெரும் உயர்வில் இருந்தது, தற்போது நிலைமை மிகவும் மோசமாகியிருக்கும் காரணத்தால் டெல்லியில் ஒரு கிலோ தக்காளியின் விலை 250 ரூபாய் முதல் 260 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய அரசின் தலையீட்டின் வாயிலாக ஜூலை 14 முதல் மானிய விலையில் தக்காளி விற்பனையின் மூலம் டெல்லியில் சில நாட்கள் தக்காளி விலை குறைந்திருந்தது. ஆனால் தட்டுப்பாடு காரணமாக மீண்டும் விலை தாறுமாறாக உயர துவங்கியுள்ளது.
மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் தரவுகளின்படி, தக்காளியின் ரீடைல் விலை புதன்கிழமை ஒரு கிலோவுக்கு 203 ரூபாய் அளவீட்டை தொட்டது. அதேசமயம் மதர் டெய்ரியின் சஃபல் சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோவுக்கு 259 ரூபாயாக இருந்தது பெரும் அதிர்ச்சி கொடுத்தது.

இதுகுறித்து மதர் டெய்ரி செய்தித் தொடர்பாளர் கூறுகையில் கடந்த இரண்டு நாட்களாக, டெல்லியின் முக்கிய உணவு பொருட்கள் களஞ்சியமாக விளங்கும் ஆசாத்பூர் சந்தைக்கு தக்காளின் வரத்து குறைந்துள்ளது. இதன் மூலம் உருவான தட்டுப்பாடு காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.
டெல்லி ஆசாத்பூர் சந்தையில் மொத்த விலை விற்பனை சந்தையில் ஒரு தக்காளி 170 முதல் 220 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. இது ரீடைல் சந்தைக்கு வரும் போது 250 முதல் 260 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. புதன்கிழமை ஆசாத்பூர் சந்தைக்கு கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வெறும் 6 சிறிய டெம்போ-வில் மட்டுமே தக்காளி வந்தது, இதன் காரணமாக விலை உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications