நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் அமைந்த பாஜக ஆட்சி விரைவில் முடிவுக்கு வருகிறது. இதனை அடுத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த உடன் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாது என கணிக்கப்பட்டாலும், சில முக்கியமான அறிவிப்புகள் முதலீட்டு சந்தையை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக பத்திர முதலீட்டு சந்தை, உள்கட்டமைப்பு துறை, கிரீன் எனர்ஜி துறை, ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமாக உள்ளது.

நிர்மலா சீதாராமன்: பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 6ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 5 முழுமையான பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய சாதனை படைதுள்ளார்.
10 ஆண்டுகளில் சாதித்தது என்ன?
கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான மத்திய அரசு பொருளாதார ரீதியாக என்னென்ன சாதித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார். அவர் பட்டியலிட்ட 10 முக்கிய சாதனைகளை பார்க்கலாம்.
1. கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் சராசரி வருமானம் 50% உயர்ந்துள்ளது என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
2. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தான் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அமல்படுத்தியது. இதனை சுட்டிக்காட்டிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி மூலம் ஒரு நாடு, ஒரு சந்தை, ஒரு வரி என்ற கட்டமைப்பு சாத்தியமாக்கப்பட்டுள்ளது என்றார்.
3. நாட்டின் உள்கட்டமைப்பு முன் எப்போதும் இல்லாத அளவு வளர்ச்சி அடைந்துள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.
4. பிரதமர் ஜன் தன் திட்டம் மூலம் நேரடியாக 34 லட்சம் கோடி மக்கள் பலனடைந்துள்ளனர் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் சுட்டிக்காட்டினார்.
5. நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது மற்றும் கொள்கை வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என கூறினார்.
6. 78 லட்சம் சாலையோர வியாரிபாரிகளுக்கு பிரதமர் ஸ்வாநிதி திட்டம் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
7. பிரதமர் ஃபசல் பீமா யோஜனா மூலம் 4 கோடி விவசாயிகள் பயிர் காப்பீடு பெற்று பலனடைந்துள்ளனர் என குறிப்பிட்டார்.
8. பிரதமர் கிஷான் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 11.8 கோடி விவசாயிகள் நேரடி பலனடைகின்றனர் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
9. பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க உருவாக்கப்பட்ட முத்ரா யோஜனா மூலம் 30 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
10. அரசு எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக கடந்த 10 ஆண்டுகளில் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இது தவிர நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்றும், ஏற்றுமதி, இறக்குமதி வளர்ச்சி கண்டுள்ளதும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறினார்.


Click it and Unblock the Notifications