சென்னை: தொழில் உலகில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல்வேறு தொழில்களை தொடங்கி சாதித்து வருகின்றனர். அந்த வகையில் சுயமாக தொழில் தொடங்கி மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கும் இந்தியாவின் முதல் 10 பெண்களின் பட்டியலை ஹாரன் இந்தியா சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் ஜோஹோ நிறுவனத்தின் ராதா வேம்பு முதலிடத்தில் இருக்கிறார்.
இவரது சொத்து மதிப்பு 47500 கோடி ரூபாய் ஆகும். ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் சகோதரியான இவர், ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டு வருகிறார். ஜோஹோ நிறுவனத்தில் 40%க்கும் அதிகமான பங்குகள் இவர் வசம் இருக்கிறது. எனவே நிறுவனத்தின் மதிப்பு உயர உயர இவரது சொத்து மதிப்பும் உயர்கிறது.

அடுத்ததாக நைக்கா நிறுவனத்தின் உரிமையாளரான ஃபால்குனி நாயர் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 32,000 கோடி ரூபாய் ஆகும். கடந்த ஆண்டு இந்நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அதேபோல ஹரிஸ்டா நெட்வொர்க்கின் ஜெயஸ்ரீ உல்லால் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் 32,000 கோடிக்கும் மேல் என ஹாரன் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த பட்டியலில் இடம் பிடித்த மற்றொருவர் பயோகான் நிறுவனத்தின் கிரண் மசும்தர் ஷா, இவர் 29,000 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டவராக திகழ்கிறார். இந்த பட்டியலில் கன்ப்ளுயன்ட் நிறுவனத்தின் நேகா நற்கேடே 4,900 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டவராக இருக்கிறார். அடுத்ததாக நடிகை ஜூஹி சாவ்லா 4,600 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.
பெப்ஸிகோ நிறுவனத்தில் தலைமை பொறுப்பு வகுத்து வந்த இந்திரா கே நூயி 3,900 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்துள்ளார். தொழில்முனைவில் இறங்க வேண்டும் சாதிக்க வேண்டும் என எண்ணும் பெண்களுக்கு எல்லாம் இவர் முன் உதாரணமாக இருக்கிறார். பிரபல லென்ஸ்கார்ட் நிறுவனத்தை சேர்ந்த நேகா பன்சால் 3,100 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டிருக்கிறார். இவர் இந்த பட்டியலில் எட்டாம் இடத்தில் இருக்கிறார்.
வியு டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தேவிதா ராஜ்குமார் சரப் 3,000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கவிதா சுப்பிரமணியன் 2,700 கோடி ரூபாய் சொத்து மதிப்போடு இந்த பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications