இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம். அதிலும் ஐபிஎல் வந்துவிட்டால் போதும் தங்களுக்கு இருக்கும் வேலைகளை எல்லாம் தள்ளிப்போட்டு, டிவியும் மொபைலும் கதியாய் இருக்கத் தொடங்கிவிடுவார்கள். கிரிக்கெட் வீரர்களுக்கு கோடியில் சம்பளம் கிடைப்பது அனைவரும் அறிந்ததுதான். எந்த கிரிக்கெட் வீரருக்கு இதுவரையில் அதிக சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது தெரியுமா?.
சமீபத்தில் ஹுருன் இந்தியா - ஃபெனாடிக் ஸ்போர்ட்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக சம்பளம் பெற்ற டாப் 25 வீரர்களின் லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இணையத்தில் இதுதான் ஹாட் டாபிக். 2008-ஆம் ஆண்டு முதன் முதலாக ஐபிஎல் தொடங்கப்பட்டதிலிருந்து, இன்று வரையில் அதிக வருமானம் ஈட்டிய 25 ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் யார் யார்? என்பதைப் பார்ப்போம்.
கோடிகளில் புரளும் கிரிக்கெட் வீரர்கள்: இதுவரையில் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக சம்பளம் பெற்ற கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். ஆர்சிபி அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி இதுவரையில் ரூ.230.2 கோடி சம்பளம் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, 2-வது இடத்தை பிடித்திருக்கிறார். இதுவரையில் ஐபிஎல் தொடர் மூலமாக ரோஹித் ரூ.227.2 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி ரூ.200.3 கோடி சம்பளத்துடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஐபிஎல் போட்டிகளின் மூலம் ரூ.157 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். இவர் ஐபிஎல் போட்டிகளில் அதிக சம்பளம் பெற்ற நான்காவது கிரிக்கெட் வீரர் ஆவார்.
அதைத் தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் ரூ.137.8 கோடி வருமானத்துடன் 5-வது இடத்தில் உள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன், ஐபிஎல் போட்டிகளின் மூலம் ரூ.137.2 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். இவர் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ரூ.126.6 கோடி சம்பளத்துடன் ஏழாவது கிரிக்கெட் வீரராக இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் ரூ.126.1 கோடியும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ரூ.225 கோடியும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ரூ.122 கோடியும் பெற்று முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அப்பால் சில வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் ஐபிஎல் போட்டிகளில் ரூ.121 கோடியும், பேட் கம்மின்ஸ் ரூ.106.7 கோடியும், வேகபந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா ரூ.104.6 கோடியும், நிக்கோலஸ் பூரன் ரூ.97.7 கோடியும், இஷான் கிஷன் ரூ.93.8 கோடியும், அக்சர் படேல் ரூ.90.6 கோடியும், இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் ரூ.88.3 கோடியும், வேகப்பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் ரூ.85.9 கோடியும் சம்பாதித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து யுஸ்வேந்திர சாஹல் ரூ. 80.2 கோடியும், டேவிட் மில்லர் ரூ.77.5 கோடியும், க்ருனால் பாண்டியா ரூ.75.5 கோடியும், முகமது ஷமி ரூ.73.5 கோடியும், மார்கஸ் ஸ்டோனிஸ் ரூ.73 கோடியும், சூர்யகுமார் யாதவ் ரூ.72.5 கோடியும், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட், ரூ.72.4 கோடியும் பெற்று முதல் 25 இடங்களுக்குள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications