இந்திய வங்கிகளில் கடந்த சில வருடங்களாக அதிகளவிலான கடன் மோசடிகள் நடந்து வந்தது அனைவருக்கும் தெரியும், இது மட்டும் அல்லாமல் 6 வருடத்தில் இந்திய வங்கிகள் சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனைகளை வசூலிக்க முடியாமல் Write off செய்து கணக்குப் புத்தகத்தில் இருந்து ஒத்திவைத்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் கடன்களைத் தங்களது செல்வாக்கை பெற்று பல வகையில் மோசடி செய்து, வங்கி மற்றும் மட்டும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை திரும்பிச் செலுத்தாமல் ஏமாற்றியுள்ளனர்.
அப்படி வங்கிகளை ஏமாற்றிய டாப் 50 கடன் மோசடியாளர்கள் அதாவது wilful defaulters யார் அவர்கள்? செலுத்தத் தொகை எவ்வளவு..? போன்ற முக்கியமான விபரங்களை ஆர்பிஐ தரவுகள் மூலம் திரட்டப்பட்டு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 31, 2022 நிலவரப்படி, இந்தியாவில் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலில் டாப் 50 பேர் கொண்ட பட்டியலை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
92,570 கோடி ரூபாய்
இந்த 50 பேர் இந்திய வங்கிகளுக்குச் சுமார் 92,570 கோடி ரூபாய் அளவிலான கடன் நிலுவையை வைத்துள்ளனர் என்று மத்திய அரசு ஆர்பிஐ தரவுகளைக் கொண்டு டிசம்பர் 19 அன்று நாடாளுமன்றத்தில் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
யார் இந்த wilful defaulters
வங்கியின் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாமலும், கடனை தனது சொந்த செலவுக்காகவும் பிற வழிகளில் செலவு செய்து வங்கியை மோசடி செய்தவர்கள் தான் wilful defaulters.
புதிய கடன்
வங்கிகள் நிர்வாகம் இப்படிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களை நிதி அமைப்பிலிருந்து ஒதுக்கிவைக்கின்றன, இதனால் கடன் வாங்குபவர்கள் வங்கிகளிடமிருந்து கடன் பெறவோ அல்லது புதிய வணிகங்களைத் தொடங்கவோ முடியாது.
கீதாஞ்சலி ஜெம்ஸ்
50 wilful defaulters கொண்ட மத்திய அரசின் பட்டியலில் 7,848 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாத கீதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடெட் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக மாநில அமைச்சர் பகவத் காரத் எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
டாப் 3 இடம்
கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து எரா இன்ஃப்ரா ரூ. 5,879 கோடி மற்றும் ரூ.4,803 கோடி மதிப்பிலான கடனைத் திருப்பிச் செலுத்தாத ரெய் அக்ரோ ஆகிய மூன்றும் டாப் 3 இடத்தைப் பிடித்துள்ளது. இது மார்ச் 31, 2022 தரவுகள், தற்போது DHFL நிறுவனம் முதல் இடத்தில் இருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
மெஹுல் சோக்ஸி
வைரங்கள் மற்றும் வைர நகைகளை விற்பனை செய்யும் கீதாஞ்சலி ஜெம்ஸ் உரிமையாளர் தான் மெஹுல் சோக்ஸி. கடந்த வாரம், வங்கிகளில் ரூ.6,746 கோடி மோசடி செய்ததாகச் சோக்சி மீது சிபிஐ மூன்று செய்தி வழக்குகளைப் பதிவு செய்தது.
5,564 கோடி ரூபாய் மோசடி
இதில் ஒரு முக்கியமான வழக்கில்,கீதாஞ்சலி ஜெம்ஸ் தலைவர் மெஹூல் சோக்ஸி மற்றும் அதன் மூத்த நிர்வாகிகள் 2010 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் சுமார் 28 வங்கிகளின் கூட்டமைப்பை சுமார் 5,564 கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிற முக்கிய நிறுவனங்கள்
இந்தப் பட்டியலில் கீதாஞ்சலி ஜெம்ஸ், எரா இன்ஃபரா, ரெய் அக்ரோ ஆகிய நிறுவன உரிமையாளர்களைத் தொடர்ந்து கான்காஸ்ட் ஸ்டீல் அண்ட் பவர், ஏபிஜி ஷிப்யார்ட், ஃப்ரோஸ்ட் இன்டர்நேஷனல் மற்றும் வின்சம் டயமண்ட்ஸ் அண்ட் ஜூவல்லரி ஆகியவை டாப் 50 பேர் கொண்ட பட்டியலில் உள்ளது என அமைச்சர் கூறினார்.
மொத்த வாராக் கடன் அளவு
ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக் கடன் அளவு 8.9 லட்சம் கோடி ரூபாய் என்ற உச்ச நிலையில் இருந்து, மார்ச் 31, 2022 மாத நிலவரப்படி, 5.41 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications