இந்தியாவில் பெரும்பாலான இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய கனவு என்றால் படித்து முடித்த உடனே ஐடி நிறுவனத்தில் சேர வேண்டும், அடுத்தப் படிப்படியாக உயர்ந்து சில வருடத்தில் ஆன்சைட் செல்ல வேண்டும், அடுத்த 5 வருடத்தில் அமெரிக்காவோ, கனடாவோ, ஐரோப்பாவோ குடியுரிமை வாங்கிச் செட்டிலாக வேகவேண்டும்.
இந்த மாபெரும் கனவைப் பலருக்கும் நினைவாக்கிய ஒரு துறை தான் ஐடி துறை. வேலைவாய்ப்பு, டாலர் வருமானம், உலக நாடுகளில் வர்த்தகம் எனப் பலவற்றுக்கும் வலிமையான அடித்தளம் உருவாக்கியிருக்கும் ஐடி துறை தற்போது புதிய பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இதில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுவது வேலைவாய்ப்பு.

இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை கடந்த 4 காலாண்டுகளாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது, இது ஒட்டுமொத்த ஐடி துறையைக் கடுமையாகப் பாதித்தது மட்டும் அல்லாமல் 6 வருடத்தில் மோசமான நிலையை அடைந்திருக்கிறது. இந்த நிலை புதிதாக ஐடி துறையில் சேர காத்திருக்கும் பட்டதாரிகள் முதல் 20-30 வருடம் அனுபவம் உள்ள டெக் ஊழியர்களையும் கலங்க வைத்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாகப் புதிய வர்த்தகத்தைப் பெற முடியாமல் தவிக்கும் ஐடி நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் விதமாகப் புதிய ஊழியர்களைத் தேர்வு செய்வதை மொத்தமாக நிறுத்தியுள்ளனர். இதேபோல் பட்டதாரி மாணவர்களைத் தேர்வு செய்யும் கேம்பஸ் இண்டர்வியூவ் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் மூலம் டாப் ஐடி நிறுவனங்களில் பெரும் கவலையாகப் பார்க்கப்பட்ட அட்ரிஷன் விகிதம் குறைந்தாலும், 4 காலாண்டுகளாகக் குறைந்து வந்த ஊழியர்கள் எண்ணிக்கை மூலம் கடந்த 6 வருடத்தில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. இது கிட்டதட்ட குட்டி ரெசிஷன் ஆகவே பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 31 ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் டாப் 8 ஐடி நிறுவனங்களில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் 17,534 பேர் குறைந்துள்ளனர். இதுவே 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 75000 பேர் குறைந்துள்ளனர், இது கடந்த 6 வருடத்தில் நடக்காத ஒன்று. இதுதான் மூத்த அதிகாரிகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை குறைப்பு குறித்து Xpheno நிறுவனம் செய்த ஆய்வில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக், LTI Mindtree, எல் & டி டெக்னாலஜிஸ் சர்வீசஸ், டெக் மஹிந்திரா, காக்னிசென்ட் ஆகிய முன்னணி நிறுவனங்களின் ஊழியர்கள் எண்ணிக்கை கணக்கிட்டு இந்த முக்கியமான தரவுகளை வெளியிட்டு உள்ளது.
டிசம்பர் முடிவில் 8 நிறுவனங்களில் 20 லட்சத்திற்கும் குறைவான ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் 2 வெளியேறிய 75000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவில்லை, வெளியேறிய ஊழியர்களுக்கு மாற்றாகக் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளனர். இதனால் ஐடி ஊழியர்களின் பணிச் சுமை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனங்கள் அடுத்தடுத்து 2 முக்கிய ஒப்பந்தங்களை பெற்றது மூலம் ஐடி துறையினருக்கு புதிய நம்பிக்கை கிடைத்துள்ளது. ஆனால் டிசிஎஸ் தவிர பிற முன்னணி ஐடி நிருவனங்கள் பெரிய வர்த்தகத்தை பெறாதது பெரும் கேள்வியாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications