முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது பிக்சட் டெபாசிட் திட்டம் தான். அதற்கு இணங்க பல வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு வட்டி விகிதங்களை வழங்குகின்றன. சில வங்கிகள் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் தங்களுடைய வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன. SBI, PNB, கனரா பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் & சிந்து பேங்க் மற்றும் கரூர் வைஸ்யா பேங்க் போன்ற முக்கிய வங்கிகளில் 300 முதல் 400 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட FD திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்தப் பதிவில் 444 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட FD திட்டத்திற்கு, எந்த வங்கியில் அதிக வட்டி வழங்கப்படுகிறது என்பதை ஒப்பிட்டு பார்ப்போம்.
SBI பேங்க் FD விகிதங்கள்: இந்த FD திட்டத்தின் முதிர்வு காலம் 444 நாட்கள். அதாவது 444 நாட்களுக்கு உங்களால் டெபாசிட் செய்த தொகையை எடுக்க முடியாது. SBI அம்ரித் விருஷ்டி FD திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதமாக 7.25 சதவீதம் வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு அதே 444 நாட்கள் முதிர்வு காலத்திற்கு 7.75 சதவீத கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. SBI அம்ரித் விருஷ்டி திட்டம் மார்ச் 31, 2025 வரை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB) FD விகிதங்கள்: பஞ்சாப் நேஷனல் பேங்க் பொது வாடிக்கையாளர்களுக்கு 400 நாட்கள் கொண்ட FD-களுக்கு 7.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே போல 400 நாட்கள் கொண்ட FD-களுக்கு, மூத்த குடிமக்கள் 7.75% வட்டி விகிதத்தைப் பெறலாம்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா FD விகிதங்கள்: SBI மற்றும் PNB வழங்கும் அதே வட்டி விகிதத்தை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவும் வழங்குகிறது. 399 நாட்கள் கொண்ட FD திட்டங்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25% வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டியும் வழங்கப்படுகிறது.
கனரா பேங்க் FD விகிதங்கள்: கனரா பேங்க் தனது 444 நாட்கள் முதிர்வுக்காலம் கொண்ட FD திட்டத்திற்கு, SBI வழங்கும் அதே வட்டி விகிதங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி வழங்கப்படுகிறது.
பாங்க் ஆஃப் பரோடா FD விகிதங்கள்: பாங்க் ஆஃப் பரோடா அதன் 399 நாட்கள் (பாப் மான்சூன் தமாகா டெபாசிட் திட்டம்) திட்டத்தில், பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதத்தையும் வழங்குகிறது.
பஞ்சாப் & சிந்து பேங்க் FD விகிதங்கள்: மற்ற வங்கிகளைப் போலவே, பஞ்சாப் & சிந்து வங்கியும் அதன் 444 நாட்களுக்கான FD திட்டங்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. வங்கியின் இந்த சிறப்பு FD திட்டம் செப்டம்பர் 30, 2024 வரை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
கரூர் வைஸ்யா பேங்க் FD விகிதங்கள்: கரூர் வைஸ்யா பேங்க், 444 நாட்களுக்கான FD திட்டங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களில் மற்ற முக்கிய வங்கிகளை விட முன்னணியில் உள்ளது. இங்கு 444 நாட்கள் முதிர்வுக்காலம் கொண்ட FD திட்டங்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7.50% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8% வட்டி வழங்குகிறது.


Click it and Unblock the Notifications