இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்கள் அனைத்திற்கும் முக்கியமான ஒரு பிரச்சனை உருவாகியுள்ளது, இதனால் அதிகப்படியான தள்ளுபடியை கொடுத்து எப்படியாவது கார்களை விற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது. இது மக்களுக்குப் பெரும் ஜாக்பாட் ஆக மாறியுள்ளது, எனவே புதுசா கார் வாங்க திட்டமிடுவோர் அனைவரும் மிஸ் பண்ணிடாம இந்த சலுகையைப் பயன்படுத்திக்கோங்க.
இந்தியாவில் இருக்கும் முன்னணி கார் நிறுவனங்கள் கடந்த 5 வருடத்தில் அளித்திடாத வகையில் மிகப்பெரிய தள்ளுபடிகளை அளித்து வருகிறது. கடைசியாக இத்தகைய தள்ளுபடி அறிவித்தது பிஎஸ் சிக்ஸ் மாற்றம் கொண்டு வந்த காலகட்டத்தில் தான், அதைத் தொடர்ந்து தற்போது அதீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கான காரணம் என்ன..?

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டிரெண்ட் வேகமாக மாறி வரும் வேளையிலும், எஸ்யூவி டிரெண்ட் ஆகியவற்றின் காரணமாகத் தீபாவளிக்குப் பின்பு சுமார் 7 லட்சம் கார்கள் விற்கப்படாமல் தேங்கிக்கிடக்கும் காரணத்தால் இதை விற்பனை செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
ஜனவரி முதல் பெரும்பாலான கார் நிறுவனங்கள் விலையை உயர்த்த திட்டமிட்டு இருக்கும் வேளையில், தேங்கி கிடக்கும் கார்களை விற்பனை செய்தாக வேண்டும். இதனால் டிசம்பர் மாதம் ஹேட்ச்பேக் கார்கள், செடான் கார்கள், குறைவாக விற்பனையாகும் எஸ்யூவி கார்களுக்கு அதிகப்படியான தள்ளுபடி அளிக்கப்பட்டு வருகிறது.
தேங்கி கிடக்கும் கார்களை விற்பனை செய்தாக வேண்டும் என்ற காரணத்தால் ஹேட்ச்பேக் கார்கள், செடான் கார்கள்,எஸ்யூவி கார்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டு வரும் தள்ளுபடியை காட்டிலும் கூடுதலாக 25 முதல் 50 சதவீதம் வரையிலான தள்ளுபடியை கொடுக்கத் துவங்கியுள்ளது.
இதன் மூலம் 2019 ஆம் ஆண்டுக்கு பின்பு அதிகப்படியான தள்ளுபடியை அளிக்கப்பட்டு உள்ளதாக FADA அமைப்பின் தலைவர் மனிஷ் ராஜ் சிங்கானியா தெரிவித்துள்ளார். இதேபோல் 7 லட்சம் கார்கள் தேக்கம் அடைந்தாலும், உற்பத்தியைக் குறைக்கும் திட்டம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என்பது முக்கியமான விஷயமாக உள்ளது.
தற்போது சந்தையில் மாருதி சுசூகி அதிகப்படியாக 2.3 லட்சம் வரையிலும், ஹூண்டாய் 1.5 லட்சம் வரையிலும், டாடா மோட்டார்ஸ் 1.4 லட்சம் ரூபாய் வரையிலும், ஹோண்டா 1 லட்சம் ரூபாய் வரையிலும் தள்ளுபடியை அளிக்கிறது.


Click it and Unblock the Notifications