அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் H-1B விசா குறித்த தனது புதிய பிரகடனத்தின் கீழ், விசா கட்டணத்தை யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியாக உயர்த்தினார். புதிதாக H-1B விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான ஒருமுறை கட்டணம், முன்பு 2,000 முதல் 5,000 அமெரிக்க டாலர் வரை இருந்த நிலையில், இப்போது 100,000 டாலராக அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.83 லட்சம் ஆக உயர்த்தப்பட்டது.
இந்த அதிரடி உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் சர்வதேசத் திறமையாளர்களை வேலைக்கு அமர்த்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த புதிய கட்டணம், முதல் முறையாக H-1B விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் தகவலாகும்.

ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள், புதுப்பிப்பவர்கள் அல்லது காலக்கெடுவுக்கு முன் விண்ணப்பித்தவர்கள் இந்த மிகப்பெரிய கட்டண உயர்வால் பாதிக்கப்பட மாட்டார்கள். இருப்பினும், உயர் கல்விக்காக அமெரிக்கா சென்று, அங்குப் பணியில் சேரத் திட்டமிடும் பல இளம் நிபுணர்களின் எதிர்காலம் இதனால் கேள்விக்குறியாகியுள்ளது. சர்வதேசத் திறமையாளர்கள் அமெரிக்காவில் நுழைவது இந்த புதிய கட்டண உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், இந்த H-1B விசா திட்டத்தால் அதிகப் பயனடைந்த நாடு எது என்பது உங்களுக்கு தெரியுமா..? அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியர்களே அதிக எண்ணிக்கையிலான H-1B விசாக்களைப் பெற்றுள்ளனர்.
அதிக விசாக்களைப் பெற்ற நாடுகள் : 2024 நிதியாண்டுக்கான மொத்த H-1B விசா அனுமதிகளில் (399,395 விசாக்கள்), இந்தியர்கள் 70 சதவீதத்திற்கும் அதிகமாக, அதாவது 283,397 விசாக்களைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள சீனா, 46,680 விசா அனுமதிகளை மட்டுமே பெற்று, மொத்த விசாக்களில் 11.7 சதவீதத்தைப் பெற்று, இந்தியாவை விட வெகு தொலைவில் பின்தங்கியுள்ளது.
ஆரம்ப வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, இந்தியாவும் சீனாவும் இணைந்து 71% பயனாளிகளைக் கொண்டுள்ள நிலையில், தொடர்ச்சியான வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, இந்த இரண்டு நாடுகளும் இணைந்து 89% பயனாளிகளைக் கொண்டுள்ளன.
மற்ற நாடுகளின் நிலை : இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் பிலிப்பைன்ஸ் (5,248 விசாக்கள்), நான்காம் இடத்தில் கனடா (4,222 விசாக்கள்), மற்றும் ஐந்தாம் இடத்தில் தென் கொரியா (3,983 விசாக்கள்) உள்ளன. இவற்றுடன், பாகிஸ்தான் 3,052 விசாக்களுடன் எட்டாம் இடத்தை பிடித்துள்ளது. பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், கனடா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து வருபவர்கள், மொத்த H-1B விசா அனுமதிகளில் 1% அல்லது அதற்கும் குறைவாகவே பெற்றுள்ளனர்.
முதல் 10 இடங்களில் உள்ள இந்தியா மற்றும் சீனா நீங்கலாக, மற்ற 8 நாடுகளும் சேர்ந்து ஒட்டுமொத்தப் பயனாளிகளில் வெறும் 7 சதவீதத்தையே பெற்றுள்ளன. இந்தத் தரவுகள், உலகளாவிய தொழில்நுட்பத் துறையிலும், அமெரிக்கப் பொருளாதாரத்திலும் இந்தியத் திறமையாளர்களின் ஆதிக்கம் எவ்வளவு ஆழமானது என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications