வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று நாட்டின் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது டிசம்பர் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டு உள்ளது. காலாண்டு முடிவுகள் வெளியாவதன் காரணமாக இன்று பங்குச்சந்தையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரும் சரிவில் இருந்து காப்பாற்றப்பட்டு உள்ளது.
அந்த வகையில் இன்று மும்பை பங்குச்சந்தையையும், முதலீட்டாளர்களையும் அசத்திய முக்கியமான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்.
வோடபோன் ஐடியா
நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான வோடபோன் ஐடியா நிறுவனம் டிசம்பர் காலாண்டில் 7,230 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. இது செப்டம்பர் காலாண்டை விடவும் 102 கோடி ரூபாய் அதிகமாகவும்.
டிசம்பர் காலாண்டில் வருவாய் 11 சதவீதம் சரிந்து 9,717 கோடி ரூபாயும், ஒரு மாதத்தின் ARPU அளவு 115 ரூபாயாகவும் 5.2 சதவீதம் உயர்வை பதிவு செய்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் வோடபோன் ஐடியா பங்குகள் 2.07 சதவீதம் சரிந்து 11.80 ரூபாயாக உள்ளது.
பந்தன் வங்கி
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் வங்கிகளில் ஒன்றாகத் திகழும் பந்தன் வங்கி இன்று வெளியிட்ட காலாண்டு முடிவுகளில் இவ்வங்கியின் லாப அளவு 36 சதவீதம் அதிகரித்து 859 கோடி ரூபாயை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 633 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பந்தன் வங்கியின் மொத்த வட்டி வருமானம் 2,125 கோடி ரூபாயாகவும், வட்டி அல்லாத வருமானம் பிரிவில் 27 சதவீதம் அதிகரித்து 712 கோடி ரூபாயும் பெற்றுள்ளது.
பந்தன் வங்கியின் வாராக் கடன் அளவு இக்காலாண்டில் மட்டும் 10.81 சதவீதம் அதிகரித்து மொத்த வாராக் கடன் அளவு 0.26 சதவீதம் அதிகரித்து 3.01 சதவீதமாக உயர்ந்துள்ளது.
JSW ஸ்டீல்
ஸ்டீல் உற்பத்தி அளவை பெரிய அளவில் உயர்த்தியுள்ள JSW ஸ்டீல் நிறுவனம் டிசம்பர் காலாண்டில் 62 சதவீத வளர்ச்சியில் 4,357 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இதேபோல் இந்நிறுவனத்தின் ஆப்ரேஷன்ஸ் மூலம் கிடைக்கும் வருவாய் அளவு 74 சதவீதம் அதிகரித்து 38,071 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் JSW ஸ்டீல் நிறுவன பங்குகள் 2.30 சதவீதம் சரிந்து 666.80 ரூபாய் அளவீட்டை எட்டியுள்ளது.
ஹிந்துஸ்தான் ஜின்க்
டிசம்பர் காலாண்டில் ஹிந்துஸ்தான் ஜின்க் நிறுவனத்தின் மொத்த லாபம் 2,701 கோடி ரூபாய் வரையில் உயர்ந்து உள்ளது. இது கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெற்ற 2,200 கோடி ரூபாய் அளவிலான வருவாயை ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகமாகும்.
இந்நிறுவனத்தின் வருவாய் அளவு 32 சதவீதம் அதிகரித்து 7,841 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, கடந்த ஆண்டு இதன் அளவு 5,915 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ லைப்
இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுப் பிரிவில் எல்ஐசி மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தினாலும் எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகத்தைப் பெற்று இயங்கி வருகிறது. எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மொத்த லாபம் கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் 232.85 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 56.34 சதவீதம் அதிகரித்து 364.06 கோடி ரூபாயாக உள்ளது.
எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மொத்த ப்ரீமியம் வருமானத்தின் அளவு 13,766 கோடி ரூபாயில் இருந்து 18,025 கோடி ரூபாயாக உயர்ந்து 30.39 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஹெச்டிஎப்சி லைப்
ஹெச்டிஎப்சி லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மொத்த லாபம் கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் 264.99 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 3.2 சதவீதம் அதிகரித்து 273.65 கோடி ரூபாயாக உள்ளது.
ஹெச்டிஎப்சி லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மொத்த ப்ரீமியம் வருமானத்தின் அளவு 9,487 கோடி ரூபாயில் இருந்து 12,124 கோடி ரூபாயாக உயர்ந்து 27.79 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications