டெல்லி: இந்தியாவின் 5 முன்னணி ஐடி நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை பரவலாக குறைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இன்ஃபோசிஸ் , டிசிஎஸ், ஹெச்சிஎல், விப்ரோ மற்றும் டெக் மகேந்திரா ஆகிய நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
2024ஆம் நிதியாண்டில் மட்டும் 69,167 என்ற அளவில் எண்ணிக்கை குறைந்துள்ளது இந்த நிறுவனங்கள் பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக ஐடி நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை இந்த அளவு குறைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையில் 13,249 பேர் குறைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல இன்போசிஸ் நிறுவனத்தில் 25,194 பேரும், விப்ரோவில் 24,516 ஊழியர்களும் குறைக்கப்பட்டுள்ளனர். டெக் மகேந்திரா நிறுவனத்தில் 6,945 பேர் குறைக்கப்பட்டுள்ளனர்.
5 முன்னணி நிறுவனங்களிலும், ஹெச்.சி.எல் மட்டுமே 2024 ஆம் நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுத்துள்ளது. ஹெச்.சி.எல் நிறுவனத்தில் புதிதாக 1,537 ஊழியர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.
2024ஆம் ஆண்டில் வளர்ச்சி குறைந்தது காரணமாக நிறுவனங்கள் பெருமளவில் ஊழியர்களை பணிக்கு சேர்க்கவில்லை என்று துறை சார்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெரிய வளர்ச்சி இல்லை என்பதாலேயே நிறுவனங்கள் ஊழியர்களை குறைத்து வருவதாகவும், குறைந்த ஊழியர்களைக் கொண்டு அதிக லாபத்தை பெற திட்டமிடுவதே காரணம் என்றும் EIIRTrend நிறுவனத்தின் தலைவர் பரீக் ஜெயின் தெரிவித்துள்ளார்.
ஐடி நிறுவனங்கள் வளர்ச்சி பாதைக்கு திரும்பும்போது ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறியுள்ளார்.
ஜெனரேட்டிவ் ஏஐ வருகை காரணமாக தற்போதைய இந்த சரிவு இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு இதே நிலைதான் நீடிக்கும் என்றும் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வேலைக்கு எடுப்பது என்பது தேக்க நிலையிலேயே இருக்கும் என்றும் unearthinsight நிறுவனத்தின் தலைவரான கௌரவ் வாசு தெரிவித்துள்ளார்.
மணிகண்ட்ரோல் தளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ஜெனரேட்டிவ் ஏஐ வருகை காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் ஐடி நிறுவனங்களில் வேலைக்கு ஆட்களை எடுப்பது என்பது சற்று குறைவாகவே இருக்கும் என்றும் கணித்துள்ளார்.
ஐடி நிறுவனமான இன்போசிஸ் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்கும் முறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது 50%க்கும் மேல் ஆஃப் கேம்பஸ் முறையில் தேர்வு செய்யப்படுவதாக கூறியுள்ளது.
இதனால் இன்போசிஸ் நிறுவனம் புதிதாக எத்தனை பேரை இந்த ஆண்டு பணிக்கு எடுக்க இருக்கிறோம் என்ற புள்ளி விவரத்தை வெளியிடவில்லை. டிசிஎஸ் நிறுவனம் 40,000 பேரையும், ஹெச்சிஎல் நிறுவனம் 10,000 பேரையும், டெக் மகேந்திரா 6,000 பேரையும் ஃபிரஸ்ஸர்களாக பணிக்கு எடுக்க இருப்பதாக கூறியுள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications