கொரோனாவின் வருகைக்கு பிறகு மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டது ஐடி துறை தான்.. பல துறைகளும் முடங்கிக் போய் கிடந்த காலகட்டத்தில், அலாரம் வைத்து எழுந்து பணி செய்த ஊழியர்களை பார்க்க முடிந்தது. வீட்டில் இருந்து பணி செய்த ஊழியர்கள், ஒரு கட்டத்தில் இதுவே நிரந்தரமாக இருக்க கூடாதா? என்ற அளவுக்கு மனம் மாறிவிட்டனர்.
குறிப்பாக பெண்களுக்கு இந்த வீட்டில் இருந்து பணி என்ற ஆப்சன் மிகச்சிறந்த வாய்ப்பாக பார்க்கப்பட்டது.
சில முன்னணி ஐடி நிறுவனங்கள் இதனை சில மாறுதல்களுடன் நிரந்தரமாக்கவும் திட்டமிட்டு வருகின்றன.
இன்றும் வீட்டில் இருந்தே பணி
இந்த நிலையில் தான் உலகின் பல நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளன. இதன் காரணமாக முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு திரும்ப வரக்கூறி அழைப்பு விடுத்து வருகின்றன. ஏற்கனவே பல துறை ஊழியர்களும் அலுவலகம் சென்று பணிபுரிந்து வரும் நிலையில், ஐடி துறை ஊழியர்கள் பெரும்பாலும் இன்றும் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர்.
அலுவலகம் வாங்க..
இதன் காரணமாக முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பதில் முனைப்பு காட்டி வருகின்றன. நாட்டின் மிகப்பெரிய முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ மார்ச் 3 -க்குள் வாரத்திற்கு 2 நாட்கள் அலுவலகம் வரும்படி அழைப்பு விடுத்துள்ளது.
காக்னிசண்ட்
இதே அமெரிக்காவினை சேர்ந்த முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட், அதன் தலைமை அலுவலகம் அமெரிக்கா என்றாலும் அதன் ஊழியர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. இந்த நிறுவனமும் ஏப்ரல் மாதத்தில் தனது அலுவலகத்தினை திறக்க திட்டமிட்டுள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வர கூறப்படலாம் என இந்த நிறுவனத்தின் இந்தியாவின் மனிதவளத்துறையின் மூத்த துணைத் தலைவர் சாந்தனு ஜா கூறியுள்ளார்.
இன்ஃபோசிஸ்
இதே மற்றொரு முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் 2022ம் ஆண்டு வரையில் ஹைபிரிட் மாடல் பணியினையே தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அடுத்த 3 - 4 மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசிஎஸ்
டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் ஒரு விரிவான திட்டத்தினையே கைவசம் வைத்துள்ளது. குறிப்பாக 25/25 திட்டத்தினை அறிவித்தது. அதன் படி மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 25% மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும். அதே போல உயர் அதிகாரிகள் 25% நேரத்தினை அலுவலகத்தில் செலவிட வேண்டும். அதேபோல ஒவ்வொரு திட்டத்திலும் 25% ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும் என்பது தான் அந்த திட்டம். இதனை 2025க்குள் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது டிசிஎஸ். இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனமும் ஹைபிரிட் மாடல் பணியினையே தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓமிக்ரான் அச்சம்
கொரோனாவை தொடர்ந்து தற்போது ஓமிக்ரான் வந்து தொல்லை கொடுத்து வருகின்றது. எனினும் இது முதல் இரண்டாம் அலையினை போல இல்லை. இந்த நிலையில் தான், படிப்படியாக நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வரக்கூறி வருகின்றன. எனினும் ஹைபிரிட் மாடல் பணிக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன.
விப்ரோ
கொரோனா தாக்கத்தின் மத்தியில் விப்ரோ நிறுவனம் மீண்டும் அதன் அலுவலகத்தினை ஜனவரி மாதத்தில் மீண்டும் மூடியது. இந்த நிலையில் அது ஹைபிரிட் மாடல் பணியினை தொடரலாம் என்று அதன் செய்தித் தொடர்பாளர் எக்னாமிக் டைம்ஸ் செய்திக்கு தெரிவித்துள்ளார்.
மார்ச் 3 முதல் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், வாரத்திற்கு இரண்டு நாள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் அலுவலகத்திற்கு திரும்பலாம். மற்ற நாட்களில் வீட்டில் இருந்தே பணியாற்றலாம், மற்றவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என அறிவிக்கபப்ட்டுள்ளது.
தற்போதைக்கு மாற்றம் இருக்காது?
தற்போது வரையிலும் கூட 96% ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். மேலும் நிறுவனம் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. இதன் காரணமாக திடீர் மாற்றம் எதுவும் தற்போதைக்கு இருக்காது என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி ரிச்சர்ட் லோபோ தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த சில வாரங்களில் அவசிய தேவை உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே நாங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்துவோம். அவர்கள் அலுவலகத்திற்கு அழைக்கப்படலாம். மேலும் அலுவலகத்திற்கு வர விருப்பம் உள்ளவர்கள் வரலாம் என அறிவிக்கப்படலாம் எனவும் ரிச்சர்ட் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications