உலகெங்கிலும் பரவி வரும் கொரோவின் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், முன்னேற்றம் கண்ட சில துறைகளில் ஐடி துறையும் ஒன்று.
அதாவது கொரோனாவிற்கு பயந்து நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கூறி வந்தன. ஆனால் இந்த சலுகையே, இன்று பல வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் வீட்டில் இருந்து பணி புரிய தேவையான புதிய தொழில்நுட்பங்கள், சைபர் செக்யூரிட்டி, ஆப் டெவலப்மென்ட், கிளவுட் கம்பியூட்டிங் உள்ளிட்ட பல பிரிவுகளில் தேவைகள் அதிகரித்து வருகின்றன.
தங்கத்தினை பின்னுக்கு தள்ளிய வெள்ளி.. 50% லாபம்.. இரட்டிப்பு குஷியில் முதலீட்டாளர்கள்..!

அதிகரித்து வரும் வாய்ப்புகள்
இந்த பெருந்தொற்றுக்கு பயந்து ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கூறிய நிலையில், தற்போது இதுவே பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இது ஐடி நிறுவனங்களுக்கு பல புதிய ஒப்பந்தங்களுக்கு வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. வருங்காலத்தில் இந்த செலவினங்கள் இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐடி துறைக்கு நல்ல வாய்ப்பாக அமையலாம்.

எந்தெந்த துறைகளில் வளர்ச்சி
இதனால் ஐடி நிறுவனங்களின் வருவாயும் அதிகரிக்கும் என்றும் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் கூறியுள்ளது. இந்த வளர்ச்சியானது குறிப்பாக கிளவுட் துறை, சைபர் செக்யூரிட்டீஸ், ஏஐ உள்ளிட்டவற்றில் அதிகம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கொரோனாவின் வருக்கைக்கு பிறகு இந்த டிஜிட்டல் வளர்ச்சியானது சற்று அதிகரித்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

இரட்டை இலக்கில் வளர்ச்சி காணலாம்
நாம் பல ஆண்டு தொழில்நுட்ப மாற்றத்தின் முதல் கட்டத்தில் இருக்கிறோம் என்று நாங்கள் நம்புகிறோம். இதனால் முதல் ஐந்து ஐடி நிறுவனங்கள் FY22E மற்றும் FY23E வருடத்தில் இரட்டை இலக்கில் வளர்ச்சியினை பதிவு செய்யலாம் என நாங்கள் நம்புகிறோம். இது ஐடி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என்று ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் ஆராய்ச்சி ஆய்வாளார் கூறியுள்ளார்.

டாப் நிறுவனங்கள் எது?
இதனால் ஐடி துறையானது நேர்மறையான வளர்ச்சியினை பதிவு செய்யலாம். இந்தியாவில் ஐடி துறையினை பொறுத்தவரையில், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மகேந்திரா ஆகியவை ஐடி துறையில் முதலிடம் வகிக்கின்றன. இதற்கிடையில் ஐடி நிறுவனங்கள் இந்த வளர்ச்சியினை காட்டும் விதமாக, புதிய ஒப்பந்தங்களை போட்டு வருவது குறிப்பிடத்தகக்து.

டிசிஎஸ் ஒப்பந்தங்கள்
முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், மிகப்பெரிய ஒப்பந்தங்களை போட்டுள்ளதாக கூறியது. குறிப்பாக டிரான்ஸ் அமெரிக்கா மற்றும் போஸ்ட்பேங்க் டீல்கள் இதற்கு சிறந்த உதாரணம். அதோடு டிசிஎஸ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையில், அதன் டிஜிட்டல் வருவாய் அதிகரித்துள்ளதாகவும், இது அடுத்து வரும் காலாண்டுகள் இன்னும் அதிகரிக்கும் என்று கூறியது நினைவுகூறத்தக்கது. இதற்கிடையில் அதன் இலக்கு விலையை 3410 ரூபாயாக மாற்றியமைத்துள்ளது ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்.

இன்ஃபோசிஸின் இலக்கு
இன்ஃபோசிஸ் நிறுவனமும் தனதி டிஜிட்டல் வணிகத்தில் பல ஒப்பங்களை செய்து வருவதனை காண முடிகிறது. சமீபத்தில் ஜெர்மனியை சேர்ந்த டைம்லர் ஏஜி நிறுவனத்திடம் இருந்து ஒரு மெகா டீலை பெற்றது குறிப்பிடத்தக்கது. இது டிஜிட்டல் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்து வருகிறது என்பதனை சுட்டிக் காட்டுகிறது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் சீராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியிருந்தது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் இலக்கினை 1450 ரூபாயாக உயர்த்தியுள்ளது புரோக்கிங் நிறுவனம்.

ஹெச்சிஎல் டெக்னாலஜி
கிளவுட் சேவை, ஆட்டோமேஷன் மற்றும் சைபர் செக்யூரிட்டீஸ் ஆகியவற்றில் வளர்ந்து வரும் வாய்ப்புகள் ஹெச்சிஎல்லுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும்.
ஹெச்சிஎல் நிறுவனம் சமீபத்தில் சில ஒப்பந்தங்களை போட்டுள்ளது. இது அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டிலை காட்டிலும், வரவிருக்கும் ஆண்டில் நல்ல வளர்ச்சி காணலாம் என்றும், இதனால் இப்பங்கின் இலக்கு விலையை 1105 ரூபாயாக மாற்றியுள்ளது.

டெக் மகேந்திராவின் இலக்கு
டெக் மகேந்திரா நிறுவனம், சமீபத்தில் தனது சேவையினை விரிவாக்கம் செய்யும் விதமாக, சில கையகப்படுத்தல்களை செய்தது. குறிப்பாக அதன் கிளவுட் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் இது டிஜிட்டல் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தது. இதனால் இந்த நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை வாய்ப்புகள் பெருகும்
பொதுவாக ஒரு துறையின் வளர்ச்சி அதிகரிக்கும் போது, அந்த துறையில் வாய்ப்புகள் பெருகும். இது வேலை வாய்ப்பினை அதிகரிக்கும். அதிலும் ஐடி துறையினை பொறுத்த வரையில் டிஜிட்டல் வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் திறனுள்ள ஊழியர்களுக்கு நிச்சயம் வரும் காலத்தில் வாய்ப்புகள் பெரும் என்பது மறுப்பதற்கில்லை.