டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் தொழில்நுட்பம் சார்ந்த முதலீடுகள் அதிகரித்ததை தொடர்ந்து 2026-ஆம் நிதியாண்டுக்கு புதிய பணியமர்த்தல் இலக்கை அதிகரித்துள்ளன. நாட்டின் 6 பெரிய IT நிறுவனங்கள் 2025-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் தொடங்குகையில் சுமார் 82,000 புதிய பட்டதாரிகளை பணியமர்த்த இலக்கு வைத்துள்ளன.
2026-ஆம் நிதியாண்டில் வங்கி, நிதி சேவைகள், காப்பீட்டு துறை மற்றும் வட அமெரிக்க சந்தை ஆகியவை அதிகரித்த தொழில்நுட்ப செலவினங்களுக்கு தயாராகி வருகின்றன. இவை இந்தியாவில் இயங்கி வரும் IT நிறுவனங்களுக்கு நேர்மறையான வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரித்துள்ளன.

கடந்த நிதியாண்டிலும் இதே போன்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு எண்ணிக்கையில் குறைவான வளர்ச்சியை கண்டது. கடந்த 7 காலாண்டுகளாக தேக்க நிலையில் இருந்த பணியமர்த்தல் செயல்முறை தற்போது கடந்த 3 காலாண்டுகளாக அதிகரித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார மந்தநிலையின் காரணமாக வாடிக்கையாளர்கள் தொழில்நுட்ப செலவினங்களை குறைக்க தொடங்கினர். இதனால் 254 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஐடி துறை, 2024-ஆம் நிதியாண்டில் 70,000-த்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை இழந்தது.
2026-ஆம் நிதியாண்டில் ஐடி நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் டாடா கன்சல்டன்சி சர்விசஸ் அதன் வழக்கமான ஆட்சேர்ப்பு எண்ணிக்கையை விட அதிகமாக சுமார் 40,000 பிரஷர்களை பணியமர்த்த இருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது. 2025-ஆம் நிதியாண்டில் இன்ஃபோசிஸ் 15,000-த்திற்கும் மேற்பட்ட பிரஷர்களை பணியமர்த்தவுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டில் 20,000-த்தை தாண்டும் என்றும் எதிர்பார்க்கிறது. அதேபோல விப்ரோ நிறுவனம் 10,000 முதல் 12000 பிரஷர்களை பணியமர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
டிசம்பர் காலாண்டில் HCL டெக் மற்றும் LTI மைண்ட் ட்ரீ போன்ற நிறுவனங்கள் தலா 2,000-த்ற்க்கும் மேற்பட்ட ஊழியர்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய நிதி நிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதேபோல டிசம்பர் காலாண்டில் பல்வேறு நிறுவனங்களும் பணியாளர் குறைப்புகளை கண்டது. டிசிஎஸ் நிறுவனத்தில் 5370 ஊழியர்கள் குறைந்தனர். டெக் மஹிந்திரா மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களில் 3,785 மற்றும் 1,157 ஊழியர்கள் குறைந்தனர். தற்போது மீண்டும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications