IT தொழில்நுட்பத் துறை மட்டுமல்லாமல் பொதுத்துறை நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாக தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. சந்தை மூலதனத்தின் அடிப்படையில் அரசுக்குச் சொந்தமான முதல் 16 நிறுவனங்களில் நான்கு நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களிலும் 2024-ஆம் நிதியாண்டில் தங்கள் நிறுவனத்தில் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கையில் சரிவைக் கண்டுள்ளன.
CNBC பகுப்பாய்வின் படி, கோல் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உள்ளிட்ட 12 பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து 2023-ஆம் நிதியாண்டில் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தன. அதன் பிறகு 2024-ஆம் நிதியாண்டிலும் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை 23,306 ஆகக் குறைத்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் முதல் 5 சதவீத பணியாளர்கள் கோல் இந்தியா நிறுவனத்திலிருந்து ஓய்வு பெறுகிறார்கள். இந்த ஆண்டில் பணியாளர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய வீழ்ச்சி காணப்பட்டது. நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தியாளரான கோல் இந்தியா இந்த ஆண்டில் 10,349 ஊழியர்களைக் குறைத்து அறிவித்துள்ளது.
2023-ஆம் நிதியாண்டில்,கோல் இந்தியா நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 9,340 பேரைக் குறைத்தது. கோல் இந்தியாவைப் பொறுத்தவரை, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கான கூலித் தொகை அதன் மொத்த செலவில் 48 சதவீதமாகும். மேலும் இது 2024-ஆம் நிதியாண்டில் 1 சதவீதம் குறைந்து ரூ.48,783 கோடியாக உள்ளது.
ஊழியர்களின் பணி ஓய்வு மற்றும் பணி நீக்கங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் இத்தகைய குறைவு ஏற்பட்டுள்ளதாக கோல் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் முகேஷ் அகர்வால் கூறியுள்ளார். வங்கிகள், உற்பத்தி நிறுவனங்கள் போன்ற துறைகளிலும் இதேபோக்கு காணப்படுகிறது.

பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்பட்டிருக்கும் இந்த ஊழியர்களின் குறைப்பு பல்வேறு காரணங்களால் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் தொழில்நுட்ப வளர்ச்சி, திறன் மேலாண்மை மற்றும் அந்தந்த நிறுவனங்களின் தேவைகள் ஆகியவை அடங்கும். ஊழியர்களை குறைப்பது நிறுவனங்களின் செயல் திறனை அதிகரிக்கும் என்றாலும் அதே நேரத்தில் அவர்களுடைய வேலை பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை நிலை குறித்த கவலைகளும் எழுகின்றன.
பிற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆனாலும் சரி அல்லது ஐடி துறையில் பணிபுரி ஊழியர்கள் ஆனாலும் சரி அந்தந்த துறைக்கு ஏற்ப தங்களை அப்டேட் செய்து கொள்வதன் மூலம் இது போன்ற பணி நீக்கங்களிலிருந்து தப்பிக்க முடியும். மேலும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்வது பிற நிறுவனங்களுக்கு மாறும் போதும் உதவிகரமானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications