அகமதாபாத்: ஐபிஎல் போட்டியில் புகழ்பெற்ற குஜராத் டைடன்ஸ் அணியை அகமதாபாத்தை தலைமை இடமாகக் கொண்ட டோரண்ட் குழுமம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தி எக்னாமிக் டைம்ஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது குஜராத் டைடன்ஸ் அணியின் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கும் ஐரோப்பாவை சேர்ந்த தனியார் ஈக்விட்டி நிறுவனமான சிவிசி கேபிட்டல் பார்ட்னஸ் நிறுவனத்துடன், டோரண்ட் குழுமம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாகவும் எக்னாமிக் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
தற்போது குஜராத் டைடன்ஸ் அணியில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கக்கூடிய சிவிசி கேபிட்டல் பார்ட்னர்ஸ் நிறுவனம் அதில் கணிசமான பங்குகளை டோரண்ட் குழுமத்திற்கு விற்பனை செய்ய இருக்கிறது.

குறைந்த எண்ணிக்கையிலான பங்குகளை மட்டுமே வைத்துக்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. குஜராத் டைடன்ஸ் அணியை பொருத்தவரை 2022 ஆம் ஆண்டு முதன்முறையாக ஐபிஎல் போட்டியில் விளையாட தொடங்கியது. தற்போது இந்த அணியின் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
முன்னதாக கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம் தான் குஜராத் டைடன்ஸ் அணியை கையகப்படுத்துவதற்கு முயற்சி செய்தது. ஆனால் இந்த அணியின் மதிப்பு மிக அதிகமாக இருப்பதால் அதானி குழுமம் பின்வாங்கியது. ஏனெனில் அதானி குழுமம் மின்சார உற்பத்தி மற்றும் துறைமுகங்கள் மேலாண்மை ,விமான நிலையங்கள் என ஆகிய மூன்று துறைகளில் மிக தீவிரமாக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதால் ஐபிஎல் அணியை வாங்கும் முடிவினை கைவிட்டுவிட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டிலேயே டோரண்ட் மற்றும் அதானி குழுமம் குஜராத் டைடன்ஸ் அணியை வாங்குவதற்கு முயற்சி செய்தது. ஆனால் அப்போது சிவிசி கேபிட்டல் பார்ட்னர்ஸ் நிறுவனம் 5,625 கோடி ரூபாய் கொடுத்து குஜராத் டைடன்ஸ் அணியை வாங்கியது. அப்போது அதானி குழுமம் 5100 கோடிக்கும், டோரண்ட் குழுமம் 4,653 கோடி ரூபாய்க்கும் ஒப்பந்தம் கோரி இருந்தது. இதில் அதிக மதிப்பு கொண்ட சிவிசி கேபிட்டல் நிறுவனத்திற்கு தான் அணியின் உரிமம் கிடைத்தது.
தற்போது சிவிசியிடம் இருந்து டோரண்ட் குழுமம் அணியை வாங்குகிறது. அடுத்த ஆண்டு இந்த விற்பனை முழுமை அடையும் என சொல்லப்படுகிறது.இந்தியாவில் ஐபிஎல் அணிகளின் மதிப்பீடுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் ஐபிஎல் போட்டிகளுக்கான மீடியா உரிமம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் வருமானம் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. 2023 முதல் 2027 ஆம் ஆண்டுக்கு உட்பட்ட காலகட்டத்தில் பிசிசிஐ, ஐபிஎல் போட்டிகளுக்கான மீடியா உரிமம் மற்றும் ஸ்பான்சர் மூலம் மட்டும் 50,000 கோடி ரூபாய் வருமானமாக ஈட்டும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications