நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம். இந்நிறுவனம் ஜப்பானின் டொயோட்டோ, இந்தியாவின் கிர்லோஸ்கர் குழுமத்தின் கூட்டு வர்த்தக நிறுவனமாகும்.
இந்நிறுவனம் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்து, உள்நாட்டில் விற்பனை செய்வதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. இந்திய சந்தையில் டொயோட்டா கார்களுக்கான தனி மவுசு உள்ளது. இந்நிறுவனம் எந்தவொரு மாடல் காரையும் அறிமுகம் செய்தாலும் அதற்கு டிமாண்ட் இருந்து கொண்டே இருக்கும்.

இன்னோவா மற்றும் பார்ச்சூனர் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தற்சமயம் கர்நாடகாவில் பெங்களூரு அருகே உள்ள பிடாடி பகுதியில் இரண்டு கார் உற்பத்தி ஆலைகள் நடத்தி வருகிறது. இந்த இரண்டு ஆலைகளின் ஆண்டு கார் மொத்த உற்பத்தி திறன் 3.42 லட்சமாகும்.
இந்நிலையில், கார்களுக்கான தேவை அதிகமாக உள்ளதால் உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் கர்நாடகாவில் அதே பகுதியில் புதிதாக ஒரு ஆலையை திறக்க உள்ளது. ரூ.3,300 கோடி முதலீட்டில் புதிய ஆலையை தொடங்க உள்ளதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய ஆலை நிறுவனத்தின் உற்பத்தி திறனை கூடுதலாக 1,00,000 கார்களாக அதிகரிக்கும். மேலும் 2,000 பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும். கடந்த ஆண்டு டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் ரூ.4,100 கோடி முதலீடு செய்ய கர்நாடக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
கார்பன் உமிழ்வை பெரிய அளவில் குறைப்பு, மின்மயமாக்கலை மேம்படுத்தும் மற்றும் பசுமையான தொழில்நுட்பங்களை நோக்கி வேகமாக மாறுதல் ஆகியவற்றை நோக்கமாக இந்த முதலீட்டை மேற்கொள்வதாக அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார், டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் மற்றும் டொயோட்டா இண்டஸ்ட்ரீஸ் என்ஜின் இந்தியா உள்ளிட்ட டொயோட்டா குழும நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.16,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளன.
சப்ளையர் மற்றும் டீலர் பார்ட்னர்கள் உள்பட மொத்த சங்கிலியில் சுமார் 88,000 வேலைகளை உருவாக்கியுள்ளன. டொயோட்டாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதி பங்களிப்பு சுமார் ரூ.30,000 கோடியாக உள்ளது. இது இந்தியாவிற்கு மட்டுமின்றி உலகிற்கும் இந்தியாவில் தயாரிப்பது என்ற அதன் தத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications