டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு 60 நாடுகள் மீது கண்மூடித்தனமாக ரெசிப்ரோக்கல் வரியை விதித்த நிலையில், நேற்று கனடா இன்று சீனா என பதிலடி கொடுக்க துவங்கியுள்ளது. அமெரிக்காவை எதிர்த்து முதல் ஆளாக கனடா, அமெரிக்காவில் இருந்து வரும் கார் மற்றும் உதிரிபாகங்கள் மீது 25 சதவீத வரியை வதித்தது. இதை தொடர்ந்து தற்போது சீனா புதிய வரியை அமெரிக்கா மீது விதித்துள்ளது. இதன் மூலம் வணிகப் போர் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது.
சீன நிதி அமைச்சகம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள வரிக்கு கூடுதலாக 34% வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்த அதே 34 சதவீத வரியை சீனா விதித்துள்ளது.

சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்கா தனது புதிய வரி விதிப்பு கொள்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், இரு நாடுகளும் மத்தியிலான நட்புறவை மேம்படுத்தவும், பரஸ்பர நன்மை அடைய வேண்டியதை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும் சீன அரசு வலியுறுத்தியுள்ளது.
சீன பொருட்களுக்கு 34% கூடுதல் பரஸ்பர வரிகளை விதிக்க அமெரிக்க அரசு எடுத்த முடிவை சீன நிதி அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இதன் விளைவாக, சீனாவுக்கு எதிரான அமெரிக்க வரிகள் மொத்தமாக 54% ஆக உயர்ந்துள்ளது.
இந்த நடவடிக்கை சர்வதேச வர்த்தக விதிமுறைகளை மீறுவதாகவும், சீன பொருளாதாரத்திற்கு பாதகத்தை ஏற்படுத்துவதாகவும், உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் விநியோகச் சங்கிலியை உடைப்பதாகவும் விமர்சனம் செய்துள்ளது.
கனடா மற்றும் சீன வரி விதிப்பு குறித்து இன்னும் வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் சீனாவின் அறிவிப்பிற்கு பங்குச்சந்தையில் உடனடியாக ரியாக்ஷன் வந்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையில் பியூச்சர்ஸ் சடசடவென சரிந்து பெரும் அதிர்ச்சியை முதலீட்டாளர்களுக்கு கொடுத்தது.
டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி குறியீட்டு உடன் இணைக்கப்பட்ட ஒப்பந்தங்கள் சுமார் 900 புள்ளிகள் குறைந்து, 2.2% சரிவை பதிவு செய்தன. அதேபோல், எஸ்&பி 500 மற்றும் நாஸ்டாக்-100 பியூச்சர்ஸ் முறையே 2.3% மற்றும் 2.6% குறைந்துள்ளன.
ஐரோப்பிய சந்தைகளிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. லண்டனில் காலை நிலவரப்படி, ஸ்டாக்ஸ் 600 குறியீடு 4.5% குறைந்தது. ஐரோப்பிய வங்கித் துறை குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டது, 9.5% க்கும் அதிகமான இழப்புகளை பதிவு செய்தது. இந்த வர்த்தக போர் மேலும் தீவிரமடைந்தால், சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications