இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் ஐபோன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ்நாட்டில், பாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ் பெரும் பகுதி உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில், உத்தனப்பள்ளி பகுதிக்கு அருகில் இருக்கும் ஆப்பிள் ஐபோன்களுக்கான உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் மக்கள் தீபாவளி கொண்டாட்டத்தை முடித்துவிட்டு மக்கள் தங்களுடைய பணிகளுக்கு திரும்பிக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் தீபாவளி விடுமுறையின் காரணமாக டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் வழக்கமான பணிகள் எதுவும் நடக்காமல் முடங்கியிருந்தது.

இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை நேரத்தில் உத்தனப்பள்ளி ஆலையில் உள்ள நானோ ஃபில்ட்ரேஷன் ஃபீட் டேங்கிற்குள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 3 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
டேங்கிற்குள் சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், இந்த மோசமான விபத்து தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் நேரடியாகக் களத்தில் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்காக ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து ஒரு குழு டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலைக்கு நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் விடுமுறை தினத்தில் இந்த கோர சம்பவம் நடந்த காரணத்தால் ஐபோன் உதிரிப்பாகங்கள் உற்பத்தியில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. மேலும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பராமரிப்புப் பணிகளை செய்யும் நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் பாதுக்காப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்யவும் டாடா நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிருஷ்ணகிரி டாடா தொழிற்சாலையில் இருக்கும் கெமிக்கல் பிளாண்ட் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் இத்தொழிற்சாலையில் பணியாற்றும் அப்ரன்டீஸ் ஊழியர்கள் சம்பள விவகாரம் காரணமாகப் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்ரன்டீஸ் ஊழியர்களை நியமனம் செய்த ஏஜென்சிகள் ரூ.13,000- 16,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டு, அதில் ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை பிடித்தம் செய்யப்படுவதாகவும், 20 நாட்களுக்குரிய சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.


Click it and Unblock the Notifications