ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள், தவிர்க்க முடியாத காரணத்தால் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய சூழல் வந்தால், அந்த குடும்பத்தில் வேறு ஒருவரை பயணிக்க செய்ய முடியும் தெரியுமா? .. ரயில்வே துறையே அதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது.
டிக்கெட்டை மாற்றுவது எப்படி?: தவிர்க்க முடியாத காரணத்தால் உங்கள் பயணத்தை ரத்து செய்ய வேண்டி வந்தால், முன்பதிவு செய்து கன்பார்ம் ஆன டிக்கெட்டை ரத்த சம்பந்தப்பட்ட உறவினர் பெயருக்கு மாற்றித்தரும் வசதி ரயில்வேயில் உள்ளது.

ரயில்வே விதிகளின்படி, எந்த ஒரு முன்பதிவு டிக்கெட்டையும் மற்றொரு நபருக்கு மாற்றலாம். அதற்கு அந்த டிக்கெட்டின் பெர்த் அல்லது இருக்கை உறுதி படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
யார் பெயரில் மாற்றலாம்: உங்கள் டிக்கெட்டை அப்பா, அம்மா, சகோதரன், சகோதரி, மகன், மகள், கணவன், மனைவி ஆகிய உறவுமுறைகளில் ஒருவருக்கு மாற்ற வேண்டும். ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் தலைமை முன்பதிவு மேற்பார்வையாளரிடம் (CRS) இதற்காக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
டிக்கெட் , உங்களின் அடிப்படை தகவல்கள், உங்களுக்கு பதிலாக பயணம் செய்ய இருப்பவரின் அடிப்படை தகவல்களை அளிக்கும் ஆவணங்களை அருகில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்திற்கு சென்று சமர்ப்பித்து மாற்றி கொள்ளலாம்.
பெயர் மாற்றம் செய்ய கட்டணம் இல்லை: இவ்வாறு டிக்கெட்டில் பெயரை மாற்றம் செய்ய எந்தக் கட்டணமும் இல்லை. ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தாலும் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் மட்டுமே பெயர் மாற்ற கோரிக்கை ஏற்கப்படும்.
பெயர் மாற்ற கடிதத்துடன் உறவினர் என்பதற்கான அடையாள அட்டையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
ஒருவேளை நீங்கள் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள செல்ல குழுவாக புக் செய்திருந்தீர்கள் என்றால், இதிலும் டிக்கெட்டை வேறு பெயருக்கு மாற்ற வழி உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன், எழுத்துப்பூர்வ கோரிக்கையை அளிக்க வேண்டும்.
மாணவர்கள் கூட டிக்கெட்டை மாற்றலாம்: அதே போல அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவராக இருந்தால், அவர் தனது டிக்கெட்டை மற்றொரு மாணவருக்கு மாற்றலாம். அத்தகைய சூழ்நிலையில், அந்த நிறுவனத்தின் தலைவர் ரயில்வேயின் முதன்மை முன்பதிவு மேற்பார்வையாளரிடம் விண்ணப்பம் செய்து டிக்கெட்டை மாற்றலாம். என்சிசி கேடட்களை சேர்ந்தவர்களும் மற்றொரு கேடட்டிற்கு டிக்கெட்டை மாற்ற ரயில் புறப்பட 48 மணி நேரத்திற்கு முன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
அரசு ஊழியர்கள் கூட தங்கள் பெயரில் உள்ள டிக்கெட்டை மற்றொரு அரசு ஊழியருக்கு மாற்ற முடியும். முன்பதிவு மேற்பார்வையாளர் பெயரில், உரிய அதிகாரி எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைக்க வேண்டும். ரயில் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 24 மணிநேரம் முன்னதாகவே விண்ணப்பம் செய்தால் டிக்கெட்டை மாற்ற முடியும்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications