சென்னை மற்றும் பெங்களூர் இடையிலான வந்தே பாரத் ரயிலின் பயண நேரத்தில் இன்னும் 25 நிமிடங்களை குறைத்து வெறும் 4 மணி நேரங்களாக மாற்ற ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பெங்களூரு- சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் வேகம் அதிகரிக்கப்பட இருப்பது உறுதியாகி உள்ளது.
அதே போல சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரத்தையும் குறைப்பதற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தற்போது பெங்களூரில் இருந்து சென்னைக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 மணி நேரங்களில் பயணம் செய்ய முடியும்.

அதில் 20 நிமிடங்களை குறைத்து 4 மணி நேரம் 40 நிமிடங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாம். தென்மேற்கு ரயில்வே பிரிவின் பெங்களூரு டிவிஷனை சேர்ந்த அதிகாரிகள் இது தொடர்பான ஆலோசனையை நடத்தினர்.
இதன்படி பெங்களூரு ஜோலார்பேட்டை பாதையில் ரயிலின் வேகத்தை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு ஜோலார்பேட்டை இடையிலான பாதையில் ரயிலின் வேகம் தற்போது மணிக்கு 110 கிலோமீட்டர் என இயக்கப்படுகிறது. இதனை 130 கிலோ மீட்டர் என அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
ரயில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்த பிறகு இதற்கு முழுமையான அனுமதி கிடைக்கும் என்றும் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தான் சென்னை மற்றும் ஜோலார்பேட்டை இடையிலான ரயில் பாதை மேம்படுத்தப்பட்டது. லெவல் கிராசிங் உள்ளிட்டவை நவீனபடுத்தப்பட்டன. அதாவது மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்லும் அளவிற்கு தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது பெங்களூரு ஜோலார்பேட்டை வரையிலான பாதையில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதி கிடைத்து விட்டால் பெங்களூருவில் இருந்து சென்னை வரை வரையிலான இந்த பாதை முழுவதும் ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடியும்.
இதன் காரணமாக இந்த பாதைகளில் இயங்கும் 2 வந்தே பாரத் மற்றும் 2 சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரம் குறையும் . வந்தே பாரத்தை பொறுத்தவரை மணிக்கு 183 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக் கூடியது ஆனால் அதனை தற்போது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்குகின்றனர்.
சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இரண்டுமே தென்னிந்தியாவின் பிரதான நகரங்கள். உற்பத்தி, ஐடி, சேவை என பலதுறை சார்ந்த நிறுவனங்களும் இங்கே இயங்குவதால் இரு நகரங்களுக்கு இடையிலான மக்கள் போக்குவரத்து அதிகமாகவே உள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications