வந்தாரை வாழ வைக்கும் சென்னை போல் ஒவ்வொரு நகருக்கும் ஒரு சிறப்பு உண்டு, அப்படி நாட்டின் ஐடி நகரமாகப் போற்றப்படும் பெங்களூரில் கஷ்டப்பட்டு ஐடி ஊழியர்களை டார்கெட் செய்து எந்த தொழில் செய்தாலும் வெற்றி நிச்சயம். இது நீண்ட நாளாக இருக்கும் பார்முலாவாக இருந்தாலும் எல்லோராலும் சொந்தமாகத் தொழில் துவங்கிவிட முடியாது.
ஆனால் பெங்களூரில் இருக்கும் பலதரப்பட்ட ஆன்லைன் சேவைகளில் இணைந்து சம்பாதிக்கும் வாய்ப்புகள் நாட்டின் பிற நகரங்களைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் reddit தளத்தில் ஒரு பதிவு தற்போது பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

பெங்களூருவில் கேப் ஓட்டுநர் ஒருவரின் வருமானம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு விழாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் பயணியும், கேப் ஓட்டுநருக்கு மத்தியிலான உரையாடல் தான் இந்த பரபரப்பான ரெடிட் பதிவுக்கு முக்கிய காரணமாகும். இந்த பதிவில் அப்படி என்ன இருந்தது..?
"நான் இன்று ஒரு விழாவிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். டாக்சி புக் செய்து பயணம் செய்து கொண்டிருந்த போது, ஓட்டுநருடன் அவரது சம்பாத்தியம் பற்றி பேச ஆரம்பித்தேன். அவர் ஒரு நாளைக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை சம்பாதிப்பதாகக் கூறினார். நான் அதிர்ச்சியடைந்து விட்டேன்! ஒரு நாளைக்கு ரூ.3,000 சம்பாதித்து, மாதம் 25 நாட்கள் வேலை செய்தால், மாத வருமானம் ரூ.75,000 ஆகிறது அல்லவா?" என்று அந்த ரெடிட் பயனர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
டாக்சி ஓட்டுநர் தொடர்ந்து பேசுகையில், பெட்ரோல் செலவுகளைக் கழித்த பிறகும், மிச்சமிருக்கும் தொகை போதுமானதாக இருப்பதாகவும், ஓலா நிறுவனத்திற்காக இயக்கும் மற்றொரு டாக்சி மூலம் கூடுதல் வருமானம் கிடைப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், தனது குழந்தைகள் நல்ல பள்ளியில் படிப்பதாகப் பெருமை உடன் கூறியுள்ளார். எவ்வளவு காலமாக டாக்சி ஓட்டுநராக இருக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, 2019 ஆம் ஆண்டு தனது வேலையை இழந்த பிறகு டாக்சி ஓட்டத் தொடங்கினேன் என்று பதிலளித்துள்ளார்.
இந்த ரெடிட் பதிவு வைரலாகி, பெங்களூருவில் டாக்சி ஓட்டுநராக இருப்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் நிதி நிலைத்தன்மை பற்றி ரெடிட் தளத்தில் கமெண்ட்கள் அனல் பறக்கிறது. பெட்ரோல் செலவுகள் இருந்தாலும், மிச்சமிருக்கும் தொகை குடும்பத்தை நிர்வகிக்க போதுமானதாக இருப்பதாகவும், குழந்தைகளின் கல்விச் செலவுகளையும் கவனித்துக்கொள்ள முடியும் என்பதையும் இந்த ஓட்டுநரின் அனுபவம் பல கோடி மிடில் கிளாஸ் மக்களின் கனவு வாழ்க்கையாக உள்ளது.
இந்த கேப் ஓட்டுனர் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..? மறக்காம கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications