சென்னை: இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் வேலைவாய்ப்புகள் குறைவாக உருவாகி வருகிறது, பட்டம் பெற்று கல்லூரியை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு வேலை வாங்குவது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது. ஒருபக்கம் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் பிரஷ்ஷர்களை பணியில் சேர்ப்பதைக் குறைத்து வரும் வேளையில் முதலீட்டுச் சந்தையும் சிறப்பாக இல்லாத காரணத்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுவது என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது.
இப்படியிருக்கையில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் 23 வயது இளைஞர் ஒருவர் வெளிநாடு செல்லலாமா அல்லது இந்தியாவிலேயே தொடர்ந்து வேலை செய்யலாமா என்ற குழப்பத்தில் இருப்பதாக ரெட்டிட் தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது மட்டும் அல்லாமல் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த பெயர் வெளியிடாத ஊழியர் செய்த ரெட்டிட் பதிவில், தனது நண்பர்கள் வெளிநாட்டில் வாழும் ஜாலியான வாழ்க்கையை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை பார்த்து தனக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதாகவும், இந்தியாவில் தங்கியிருப்பது சரியான முடிவா என்ற கேள்வியை இணைய வாசிகளிடம் முன் வைத்துள்ளார்.
இந்த இளைஞரின் பதிவு வைரலாகி, பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர். சமூக வலைதளங்கள் நம்மை பொறாமைப்பட வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடு செல்வது என்பது அதிக செலவு பிடிக்கும் விஷயம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
"நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இருக்கிறீர்கள், மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பது என்பது பெரிய விஷயம், உங்கள் நண்பர்களின் இன்ஸ்டா ஸ்டோரிக்காக வெளிநாடு செல்வது நல்ல யோசனையல்ல" என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
"நீங்கள் வேலை இழந்து எட்டு மாதங்கள் வேலையில்லாமல் இருந்து, பின்னர் மாதம் 50,000 சம்பாதித்து, நான்கு வருடங்களுக்குப் பிறகு மாதம் ஒரு லட்சம் சம்பாதித்தால், ஒரு லட்சம் சம்பளத்தின் மதிப்பை நீங்கள் உணரலாம்" என்று மற்றொருவர் கூறியுள்ளார்.
இன்று ஐஐடி மாணவர்களுக்குக் கூட பெரிய அளவிலான வேலைவாய்ப்புகள் கிடைப்பது இல்லை என்பது தான் முக்கியமான விஷயமாக உள்ளது. அதேவேளையில் முன்னணி கல்லூரியில் பிடித்து பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களுக்கு அதிகப்படியான சம்பளத்தில் எளிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையில் ரெட்டிட்டில் பதிவிட்ட நபர் எந்த கல்லூரியில், எந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறார் என்பதை வெளியிடவில்லை. இந்த இளைஞரின் குழப்பம் பலருக்கும் பொதுவான ஒன்றாக இருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் இது குறித்த விவாதம் தொடர்ந்து நீடிக்கிறது.


Click it and Unblock the Notifications