எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், வேலை இழப்பது என்பது மிகவும் கடினமான அனுபவம். எதிர்காலம் குறித்த கவலையும், உடனடியாக வேலை தேட வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.
இதற்கிடையில் குடும்ப செலவுகள், நிதி நெருக்கடி, மன அமைதியை தொலைப்பது என பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். சுத்தி சுத்தி பெரும்பாலான நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வரும் வேளையில் இத்தகைய மோசமான சூழ்நிலையை எதிர்கொள்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

ஆனால், இவை அனைத்திற்கும் நேர்மாறாக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி, வேலை இழப்பை ஒரு வாய்ப்பாக மாற்றியுள்ளார். தனது திறமைகளை அனைவருக்கும் எடுத்துக்காட்டும் வகையில், பன்மொழி வீடியோ ரெஸ்யூம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இந்த வீடியோ உலகம் முழுவதும் பலரையும் கவர்ந்திருக்கும் வேளையில், புதிய பணியை தேடுவோருக்கு மத்தியில் இது தனித்துவமான முயற்சி என பாராட்டையும் பெற்றுள்ளார்.
மார்ட்டா புவேர்ட்டோ என்ற பெயர்கொண்ட இந்தப் பெண்மணி, ஆறு வெவ்வேறு மொழிகளில் சரளமாகப் பேசி ஒரு வீடியோ ரெஸ்யூம்-ஐ உருவாக்கியுள்ளார். தனது மார்க்கெட்டிங் திறன்கள், பன்மொழித் திறன் உள்ளிட்ட பல்வேறு திறமைகளை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது உலகளவில் டிரெண்டாகி வருகிறது. மார்ட்டாவின் துணிச்சலையும் புதுமையான சிந்தனையையும் பலரும் பாராட்டி வருகின்றனர். சிலர், இவரை பணி நீக்கம் செய்த நிறுவனத்தின் மீது கேள்வி எழுப்பியுள்ளனர்.
வேலை இழப்பைச் சந்திக்கும் பலருக்கு மார்ட்டா புவேர்ட்டோவின் இந்த முயற்சி நிச்சயமாக ஒரு முன்னுதாரணமாக அமையும். திறமைகளை அனுபவமிக்க முறையில் வெளிப்படுத்தி, சவால்களையும் சாதனையாக மாற்ற முடியும் என்பதற்கு இவரது செயல் உதாரணம்.
உலக நாடுகளில் மட்டும் அல்லாமல் இந்தியாவிலும் வீடியோ ரெஸ்யூம் கலாச்சாரம் உருவாகி பல ஆண்டுகள் ஆகியுள்ளது. பல ஸ்டார்ட்அப்-கள் தற்போது வீடியோ ரெஸ்யூம் கேட்பதை வாடிக்கையாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications