தமிழ்நாட்டின் வளர்ச்சி இனி சென்னையை மட்டும் நம்பியிருக்கப் போவது இல்லை என நீண்ட காலமாகக் கூறப்பட்டாலும், நேற்று தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டின் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முடிவு மூலம் இது உறுதியானது.
வின்பாஸ்ட் நிறுவனம் தனது பேட்டரி தொழிற்சாலை சென்னையில் அமைக்கும் திட்டத்தைத் தான், தமிழக அரசிடம் முன்வைத்தது, ஆனால் தமிழ்நாடு அரசு வின்பாஸ்ட் உடன் பேச்சுவார்த்தை நடத்தி தூத்துக்குடி-க்கு மாற்றியது எனத் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தது மூலம் 100க்கு 200 சதவீதம் உறுதியானது.

ஒரு பகுதி வளர்ச்சி அடையவேண்டுமெனில் முதல் போக்குவரத்து வசதிகள் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும். அந்த வகையில் தற்போது தமிழ்நாடு அரசு மாநிலத்தின் வளர்ச்சியை 5 மத்திய புள்ளியை நிர்ணயம் செய்து விரிவாக்கம் செய்து வருகிறது.
சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி இந்த 5 மாவட்டத்தையும் முக்கியப் போக்குவரத்து முனையங்கள் மூலம் இணைக்கும் திட்டத்தைத் தான் தற்போது தீவிரமாகச் செய்து வருகிறது. இதேவேளையில் இந்த 5 மாவட்டத்திலும் புதிய முதலீடுகளையும் ஈர்க்கும் பணியில் மொத்த தமிழ்நாடு அரசும் இயங்கி வருகிறது.
தமிழக அரசு சமீபத்தில் பெரம்பலூரில் மாபெரும் காலணி தொழிற் பூங்காவை அமைத்தது. இது மட்டும் அல்லாமல் உலகின் 4 மிகப்பெரிய நிறுவனங்களான தைவான் நாட்டைச் சேர்ந்த Shoetown, Feng Tay, Pou Chen, Hong Fu ஆகியவை, தற்போது தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைக்க உள்ளது. இந்த நிலையில் பெரம்பலூர் அடுத்த 10 வருடத்தில் மிகவும் முக்கியத் தொழிற்பகுதியாக இருக்கும்.
இதேவேளையில் மணப்பாறை சிப்காட் பகுதி பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுப் பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஈர்க்கப்பட்டு வருகிறது. மணப்பாறை சிப்காட்-ல் டாடா குழுமத்தின் டாடா ப்ராஜெக்ட்ஸ் சுமார் 283 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படிப் பெரம்பலூர் மற்றும் மணப்பாறை ஆகியவற்றை இணைக்கும் பாலமாகத் திருச்சி விளங்குகிறது. திருச்சியில் ஏற்கனவே ஐடி, உற்பத்தி, MSME, விவசாயம் எனப் பல துறை சார்ந்த நிறுவனங்கள் இயங்கி வரும் வேளையில் திருச்சி விமான நிலையும் முக்கியத் தேவையாக இருப்பதைத் தாண்டி அவசியமாகவும் மாறியுள்ளது.
இதன் காரணமாகவே திருச்சி மாநகரின் சர்வதேச விமான நிலையத்தில் 1100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய டெர்மினல் திறக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. திருச்சியில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், கொழும்பு, வியட்நாம் நாட்டின் ஹோசி மின் சிட்டி, அபுதாபி, தோஹா, குவைத், மஸ்கட் ஆகிய நாடுகளுக்கு நேரடி விமானச் சேவை அளிக்கப்படுகிறது.
இதேபோல் திருச்சி விமான நிலையம் மொத்த தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிய அளவில் பங்களிக்கும். உதாரணமாக ஏர் கார்கோ சேவைகளுக்கும், வேகமான விமானப் பயணிகள் போக்குவரத்து, குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகைக்குத் திருச்சி முக்கிய இடமாக மாறும்.
திருச்சி விமான நிலையம் மூலம் தென் தமிழ்நாட்டின் வளர்ச்சியின் வேகம் பெரிய அளவில் உயரும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. மேலும் திருச்சி பிராந்தியத்தில் ஏற்றுமதி, இறக்குமதியை மேம்படுத்த நாகப்பட்டினத்தில் இருக்கும் திருக்குவளை துறைமுகம் பெரிய அளவில் பயன்படும். இந்தத் துறைமுகத்தில் வருடம் 40 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தமிழ்நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதியை மேம்படுத்தச் சென்னை, நாகை, தூத்துக்குடி துறைமுகங்கள் பெரிய அளவில் பயன்படுகிறது. இதுவே வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்களை அதிகளவில் ஈர்க்க முக்கியக் காரணமாக அமைகிறது.


Click it and Unblock the Notifications