திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவு பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திங்கட்கிழமை தெரிவித்தார். தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை பகுதியாக இருக்கும் திருச்சியில் தொடர்ந்து உள்நாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்து வரும் வேளையில் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த அசுர வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு திருச்சியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிலையில் திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியைச் சிறப்பாக இணைக்கும் வகையில் விமான நிலையம் தரம் உயர்த்தப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டாலும், திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்குக் கூடுதல் விரிவாக்கம் தேவைப்படுகிறது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவாக்கம் செய்ய கூடுதல் நிலம் கையகப்படுத்தும் பணிகள் அடுத்த 2 மாதங்களில் நிறைவு பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கூறினார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எம். பிரதீப் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். ராஜலட்சுமி மற்றும் விமான நிலைய இயக்குனர் ஜி. கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் கலந்துரையாடல் நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, "விமான நிலைய விரிவாக்கத்திற்குத் தேவையான 166.97 ஏக்கர் நிலத்தை பாதுகாப்புத்துறை ஒப்படைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதற்குப் பதிலாகச் சமமான நிலத்தை வழங்குவதற்காக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நாளை திருச்சி வருகை தந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
அதேபோல், மாநில அரசு கூடுதலாக 345.62 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த உள்ளது. இதில் சதுப்பு நிலங்களும் அடங்கும். இந்த நிலம் கையகப்படுத்தும் பணி 95% முடிவடைந்துள்ளதாகவும், இன்னும் இரண்டு மாதங்களில் முழுமையாக நிறைவு பெறும் என்றும் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்." என்றார்.

10 வருடத்திற்கு முன்னதாக திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை 6,000 அடியிலிருந்து 8,000 அடிகளாக நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து, பெரிய விமானங்களை இயக்க வசதியாக ஓடுபாதையை 12,000 அடிகளாக விரிவுபடுத்தும் திட்டத்தை இந்திய விமான நிலைய ஆணையம் 2010-11-ம் ஆண்டில் தயாரித்தது. இதற்காக 510 ஏக்கர் நிலம் தேவைப்படும் எனவும், அதில் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான நிலமும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தொடங்கிய நிலம் கையகப்படுத்தும் பணி 10 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications