திருச்சி: பிரபல பரதநாட்டிய கலைஞரான ஜாகீர் உசேன் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு 3160 கேரட் மாணிக்க கற்கள் மற்றும் 600 வைர கற்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தை காணிக்கையாக கடந்த வாரம் வழங்கியது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ரங்கநாதர் கோயில் கருதப்படுகிறது. இந்த கோயிலில் இருக்கும் உற்சவர் நம் பெருமாளுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கீடத்தை பிரபல பரதநாட்டிய கலைஞரான ஜாகீர் உசேன் காணிக்கையாக வழங்கியுள்ளார்.

ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோரிடம் அவர் கோயில் நடைமுறைகளை பின்பற்றி வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கினார்.
இது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜாகீர் உசேன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மீது தனக்கு மிகுந்த பக்தி இருப்பதாக கூறினார். இந்த பக்தியின் விளைவாகவே வைர கிரீடத்தை காணிக்கையாக அளித்துள்ளேன் என தெரிவித்தார்.
அரை அடி உயரம் கொண்ட இந்த கிரீடத்தில் 3160 கேரட் மாணிக்க கற்களும் 600 வைரக் கற்களும் உள்ளன. மரகதக்கல் மற்றும் தங்கம் ஆகியவற்றை கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஒற்றை மாணிக்க கல் கொண்டு வரப்பட்டு அதில் கிரீடம் செய்துள்ளனர். அதன் மீது 400 கிராம் தங்கம் மற்றும் வைரம் ,மரகத கற்களையும் பதித்து கிரீடத்தை வடிவமைத்துள்ளனர். இந்த கிரீடத்தை தயார் செய்வதற்கு எட்டு ஆண்டுகள் ஆனதாக சொல்லப்படுகிறது. கிரீடம் தயாரிப்பதற்கு தேவையான பெரிய அளவிலான மரகத கல்லை கண்டுபிடித்து வாங்குவதற்கு வாங்குவதற்கு மூன்று ஆண்டுகள் ஆனதாக அவர் கூறியுள்ளார்.
மொத்தம் ஆறு கலைஞர்கள் இணைந்து இந்த கிரீடத்தை வடிவமைத்துள்ளனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதனை தயாரிக்க தொடங்கிய போது இதன் மதிப்பு 52 லட்சம் என கணிக்கப்பட்டது. தற்போது இதன் மதிப்பு என்ன என்ற விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.
இதனிடையே உலகிலேயே முதன்முறையாக மாணிக்க கற்களால் செய்யப்பட்ட வைர கிரீடம் இது என்பது இதன் தனிச்சிறப்பு என கூறியிருக்கும் ஜாகீர் உசேன் , பிறப்பால் தான் இஸ்லாமியராக இருந்தாலும் ரங்கநாதர் மீது தனக்கு மிகுந்த பற்று இருப்பதாக தெரிவித்தார்.
முன்னதாக கோயிலுக்கு வருகை தந்த ஜாகீர் உசேனுக்கு கோவில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பாக சால்வை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications