திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் முதல் தொழிற்சாலை தற்போது தனது உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. ரினோ ஸ்காஃப் இண்டஸ்ட்ரி ப்ரைவேட் லிமிடெட் (Rhino Scaff Industry) என்ற இந்த ஸ்கேஃபோல்டிங் தயாரிப்பு நிறுவனம், 99 ஆண்டுகால குத்தகை அடிப்படையில் நிலம் ஒதுக்கீடு பெற்ற 13 தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும்.
தமிழக அரசு 2013 ஆம் ஆண்டில் துவங்கிய மணப்பாறையின் சிப்காட் தொழிற்பூங்கா, தொழில் நிறுவனங்களுக்கு மலிவு விலையில் நீண்ட கால குத்தகை நிலம் வழங்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டது.

இதற்காக மணப்பாறையைச் சுற்றியுள்ள பகுதியில் 1,000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை அரசு கையகப்படுத்தி, சாலை, மின்சாரம், குடிநீர் என தொழிற்சாலைக்குச் சேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி 2019 முதல் நிலத்தை ஒதுக்கீடு செய்யும் பணிகளைத் துவங்கியுள்ளது.
ஆரம்பத்தில் அதிகப்படியான நிறுவனங்கள் விருப்பம் தெரிவிக்காவிட்டாலும் கடந்த 2 வருடத்தில் அதிகளவிலான நிறுவனங்கள் அதிகப்படியான ஆர்வம் காட்ட துவங்கியது. இந்த நிலையில் இப்பகுதியில் நிலம் ஒதுக்கீடு பெற்ற 13 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் தற்போது தங்கள் தொழிற்சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கும்போது, அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சி துரிதப்படுத்தப்படும், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் மற்றும் அதிகளவிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரும் இந்த தொழிற்பூங்கா, தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை மையமாக உருவெடுக்கும் திறன் கொண்டது.
தமிழ்நாட்டு முதல்வர் முக ஸ்டாலின் தனது அமெரிக்கப் பயணத்தில் JABIL நிறுவனத்துடனான 2000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஜாபில் இன்க், திருச்சியில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டது.
இந்த தொழிற்சாலையும் தற்போது திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள மணப்பாறை சிப்காட்-ல் அமைக்கப்பட உள்ளது. ஆப்பிள், சிஸ்கோ, HP மற்றும் டெல் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் உதிரிப்பாகங்களை வழங்கும் இந்த ஜாபில் நிறுவனம், திருச்சியில் சுமார் ரூ.2000 கோடி முதலீட்டில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க சுமார் 70 ஏக்கர் நிலம் தேடுகிறது.


Click it and Unblock the Notifications