தமிழ்நாட்டின் மையத்தில் இருக்கும் திருச்சி நகரம் விரைவில் புதிய அடையாளத்தை பெற உள்ளது. திருச்சியில் அமைக்கப்பட இருக்கும் புதிய சிப்காட்டை நாட்டின் முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களுக்கான உற்பத்தி மையமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் பகுதி சிப்காட் நாட்டின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைக்கான உற்பத்தி மையமாக உருவெடுக்க போகிறது. மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டிபிஐஐடி (DPIIT) அமைப்பின் Bhavya - Bharat Audyogik Vikas Yojna திட்டத்தின் கீழ், திருவெறும்பூர் சிப்காட் தொழிற்பூங்காவை பாதுகாப்பு உபகரண உற்பத்தி மையமாக உருவாக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

நாடு முழுவதும் உள்ள 100 முக்கிய நகரங்களில் Plug and Play வசதி கொண்ட பாதுகாப்பு உற்பத்தி தொழிற்பூங்காக்களை உருவாக்குவதே Bharat Audyogik Vikas Yojna திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதில் ஒரு நகரமாக திருச்சியை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடத்தின் முக்கிய முனையங்களில் ஒன்றாக திருச்சி திகழ்கிறது. இந்நிலையில், திருச்சியின் தொழில் சூழலை மேம்படுத்தவும், பன்முகப்படுத்தவும் திருவெறும்பூர் சிப்காட் பகுதியை பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைக்காக பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் சார்பாக ஆலோசனைகள் மற்றும் களப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ள Vimaan - Valavanthankottai Industrial Manufacturer Association & Network அமைப்பின் தலைவர் ராம்பிரகாஷ், தற்போது போர்ச்சூழல்கள் மாறிவிட்டன. அமெரிக்கா-ஈரான் போர் போன்ற சம்பவங்கள் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளன. எனவே, விண்வெளி துறைக்கு இத்தகைய நவீன ஆயுதங்களை உற்பத்தி ஒரு நகரமாக திருச்சி திருவெறும்பூர் ஒரு சிறந்த தேர்வாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
திருவெறும்பூர் அருகே உள்ள எலந்தப்பட்டி மற்றும் சூரியூர் கிராமங்களில் உள்ள 148.9 ஏக்கர் சிப்காட் நிலங்கள் மட்டுமின்றி, திருச்சியில் உள்ள ஆயுத தொழிற்சாலையை ஒட்டியுள்ள அரசு நிலங்களையும் இந்த திட்டத்திற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருவெறும்பூரில் , Deep-tech ஸ்டார்ட் அப்களை ஊக்குவித்து, உலகளாவிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நவீன ட்ரோன்கள் மற்றும் யுஏவிகளை தயாரிக்க திட்டமிடப்படுவதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
திருவெறும்பூர் பகுதியில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றின் பாதுகாப்பு உபகரண உற்பத்தி திறனை மேம்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த உடன் எந்தெந்த நிறுவனங்கள் இங்கே ஆலை அமைக்க போகின்றன என்னென்ன உற்பத்தி செய்யப்பட உள்ளன என்ற தகவல்கள் வெளிவரும்.
திருச்சி மற்றும் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு இது நல்ல செய்தி. ஏனெனில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதன் மூலம் பல ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும். இது ஒட்டுமொத்தமாகவே திருச்சியின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications

