திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் பகுதியில் 415 கோடி ரூபாய் செலவில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணி நடப்பு மாதத்திலேயே தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமும் தமிழ்நாடு மின்னணு கழகமும் இணைந்து தமிழ்நாடு டைடல் பார்க் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிறுவனம் சார்பாக சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. ஐடி வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் டைடல் பூங்காக்களை அரசு அமைத்து வருகிறது.

இத்தகைய டைடல் பூங்காக்களில் ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தை நிறுவுவது மிக எளிமையாக இருக்கிறது. இதனால் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. எனவே சென்னை ,கோவை போல திருச்சி மாவட்டத்தில் டைடல் பார்க் அமைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.
திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகில் இந்த டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது. 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் 93 ஆயிரம் சதுரடியில் சுமார் 415 கோடி ரூபாய் செலவில் இந்த டைடல் பூங்கா கட்டப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த டைடல் பார்க்கில் 740 கார் நிறுத்துமிடம் மற்றும் 1500 இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த டைடல் பார்க் மூலம் 5000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என சொல்லப்படுகிறது.
இந்த டைடர் பார்க் தரைதளத்துடன் கூடிய 6 தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது. இரண்டு கட்டங்களாக கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. முதல் கட்ட கட்டுமான பணிக்கு ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி மாத இறுதிக்குள்ளேயே கட்டுமான பணிகள் தொடங்கிவிடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். கட்டுமான பணிகள் சுமார் 18 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்டத்தில் 5.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பார்க் கட்டுமான பணிகள் நடைபெற இருக்கின்றன. இதற்காக 14 .1 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலத்திற்காக டைடல் பார்க் நிறுவனம் திருச்சி மாநகராட்சிக்கு 12.8 கோடி ரூபாயை செலுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
டைடல் பார்க் கட்டுவதற்காக கண்டறியப்பட்டுள்ள நிலத்தில் கழிவு நீர் குழாய்கள் கடந்து செல்வது தெரிய வந்துள்ளது. இதனை வேறு இடத்திற்கு மாற்றுமாறு டைடல் பார்க் நிர்வாகம் திருச்சி மாநகராட்சி இடம் கோரிக்கை வைத்துள்ளது.
மொத்தம் 1730 மீட்டர் நீளம் கொண்ட இந்த கழிவு நீர் குழாய்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதற்கான செலவை டைடல் பார்க் நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி முடிவடைந்த உடன் முதல் கட்ட கட்டுமான பணிகள் தொடங்கி விடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications