அமெரிக்காவில் செயல்படக்கூடிய டெக் நிறுவனங்கள் திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவிற்கு வரவழைத்து பணியமர்த்துவதற்கு ஹெச்1பி விசாக்களை தான் பயன்படுத்துகின்றன. இந்த விசா மூலம் அமெரிக்காவில் வேலை செய்யக்கூடிய வெளிநாட்டவர்களில் 70% பேர் இந்தியர்கள் .
அந்த வகையில் ஹெச்1பி விசா பெரும்பாலும் இந்தியாவை சேர்ந்த டெக்கிகளால் தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே ஹெச்1பி விசாவில் ஏற்படுத்தப்படக்கூடிய எந்த ஒரு மாற்றமும் இந்திய ஐடி ஊழியர்களையும் இந்திய ஐடி நிறுவனங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கிறது. இந்த சூழலில் டிரம்ப் நிர்வாகம் ஹெச்1பி விசா ஒதுக்கீட்டு முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்திருக்கிறது .

வரும் பிப்ரவரி 27 ஆம் தேதியிலிருந்து ஹெச்1பி விசாவில் தற்போது உள்ள லாட்டரி சிஸ்டம் நீக்கப்படுகிறதாம். அமெரிக்க அரசாங்கம் ஒரு ஆண்டாக எவ்வளவு ஹெச்1பி விசா வழங்க வேண்டும் என கட்டுப்பாடு வைத்துள்ளது. அதை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வருவதால் அவற்றை ரேண்டம் லாட்டரி சிஸ்டம் என்ற முறையில் தேர்வு செய்து விசா வழங்குகிறது. அனைத்து விண்ணப்பங்களும் பெறப்பட்ட குலுக்கல் முறையை போல ரேண்டமாக லாட்டரி சிஸ்டம் விண்ணப்பங்களை தேர்வு செய்யும்.
ஆனால் இந்த புதிய விதிமுறையின் படி விசா விண்ணப்பதாரர்களுக்கு அவர்களுக்கு கிடைக்கப் போகும் சம்பளத்தின் அடிப்படையில் விண்ணப்பங்கள் ரேங்கிங் அதாவது தரவரிசை செய்யப்படும். இதன் பிறகு அதிகபட்ச சம்பளம் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து விசா ஒதுக்கீடு செய்யப்படும். டிரம்ப் நிர்வாகம் ஹெச்1பி விசா உயர்திறன் கொண்ட வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் ஹெச்1பி விசா மூலம் குறைந்த விலையில் வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்தி அமெரிக்கர்களுக்கு வாய்ப்பு தராமல் மறுக்கின்றன என்று குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் தான் டிரம்ப் நிர்வாகம் ஊதிய அடிப்படையில் ஹெச்1பி விசா ஒதுக்கீடு என்ற நடைமுறையை அமலுக்கு கொண்டு வருவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது .
அண்மையில் தான் டிரம்ப் நிர்வாகம் ஹெச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலர்களாக உயர்த்தியது. தற்போது உயர் சம்பளம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை என்ற புதிய விதிமுறையும் கொண்டு வந்திருக்கிறது. அமெரிக்க குடியேற்ற சட்டத்தின் படி ஒரு ஆண்டுக்கு 65,000 ஹெச்1பி விசாக்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்த வெளிநாட்டவர்களுக்கு வழங்குவதற்காக கூடுதலாக 20,000 விசாக்கள் ஒதுக்கப்படுகின்றன.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கையை விட கூடுதலான விண்ணப்பங்கள் வருகின்றன எனவே தான் லாட்டரி சிஸ்டம் என்பதை நடைமுறையில் வைத்திருந்தார்கள். ஆனால் இனி லாட்டரி சிஸ்டம் கிடையாது. நிறுவனங்கள் ஹெச்1பி விசாவுக்காக விண்ணப்பம் செய்யும் போதே குறிப்பிட்ட அந்த நபருக்கான சம்பளத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். அதன் அடிப்படையில் விண்ணப்பங்கள் தரவரிசைப்படுத்தி விசா வழங்கப்படும். எனவே அதிக சம்பளம் இருந்தால் விசா கிடைக்கும் வாய்ப்பு மிக அதிகம், குறைந்த சம்பளம் எனில் விசா கிடைக்கும் வாய்ப்பு குறைந்துவிடும்.


Click it and Unblock the Notifications