அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு தொடர்ச்சியாக ஹெச்1பி விசா, கிரீன் கார்டு விண்ணப்பங்களில் பல மாற்றங்களை அறிவித்து இந்திய ஐடி நிறுவனங்களுக்கு நெருக்கடி தந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கான விதிகளையும், Permanent Labor Certification - PERM திட்டத்திலும் புதிய மாற்றங்களை கொண்டு வர தயாராகி வருகிறது.
அமெரிக்க ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய நிறுவனங்கள், அதே வேலைக்கு வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்த கோரி விசா விண்ணப்பம் செய்ய முடியாது. அதாவது அமெரிக்க ஊழியரை பணி நீக்கம் செய்து அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு அந்த பணியில் வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த முடியாத வகையில், இரண்டு வருட கால தடை விதிக்க பரிசீலனை செய்யப்படுகிறது.

அமெரிக்கர்களை வேலையிலிருந்து தூக்கிவிட்டு, அந்த இடங்களுக்கு குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு ஊழியர்களை கொண்டுவரும் முறையை கட்டுப்படுத்த இந்த விதி கொண்டுவரப்படுகிறது என்கின்றனர் அதிகாரிகள்.
இதுவரை நடைமுறையில் இருந்த காகிதம் மற்றும் அச்சு சார்ந்த வேலைவாய்ப்பு விளம்பர முறைகளை மாற்றிவிட்டு, இனி இணையதள வழியிலான ஆள்சேர்ப்பு முறையை நிறுவனங்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வெளிநாட்டு ஊழியர்களை தேடும் முன், அந்த வேலைக்கான விளம்பரத்தை குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு ஆன்லைனில் வெளியிட வேண்டும்.
இதன் மூலம் உள்ளூர் அமெரிக்க ஊழியர்கள் அந்த வேலைவாய்ப்பை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க வாய்ப்பளிப்பதாக இது அமையும் என அதிகாரிகள் கூறுகின்றனர். அதாவது வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை, பொருத்தமான அமெரிக்கர் கிடைக்காத பட்சத்தில் தான் வெளிநாட்டவருக்கு அந்த வேலை செல்ல வேண்டும் என்பது தான் இந்த புதிய விதிமுறைகளின் நோக்கம்.
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற முன்னணி ஐடி நிறுவனங்கள் அமெரிக்க கிளைண்ட்களுக்கு பிராஜெக்டுகளை முடிக்க ஊழியர்களை ஹெச்1பி விசா மூலம் ஆன்சைட் முறையில் அமெரிக்கா அனுப்புகின்றன. இப்படி செல்பவர்கள் பின்னாளில் கிரீன் கார்டு பெற்று அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிடுகின்றனர். இப்படி ஹெச்1பி விசா மூலம் அமெரிக்கா வருபவர்களால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பறி போவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
எனவே டிரம்ப் நிர்வாகம் ஹெச்1பி விசா மற்றும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டு பெறுவதற்கு இந்த PERM (Permanent Labor Certification) திட்டம் ஆகியவற்றில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. இது இந்திய ஐடி நிறுவனங்களூக்கு பெரும் சிக்கலாக மாறி வருகிறது. இதனால் டெக் நிறுவனங்கள் ஹெச்1பி விசா விண்ணப்பங்களை குறைத்து விட்டன. மேலும் முடிந்த வரை அமெரிக்காவிலேயே ஊழியர்களை பணியில் அமர்த்துவது, இந்தியாவில் இருந்தே வேலையை முடிக்க பார்ப்பது என மாறி வருகின்றன. ஆனால் இந்த நடவடிக்கைகள் ஆயிரக்கணக்கான இந்திய டெக் ஊழியர்களின் அமெரிக்க கனவை கலைய செய்கின்றன.


Click it and Unblock the Notifications

