அமெரிக்காவில் செயல்பட்டு வரக்கூடிய நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்கு தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும் என்ற நிலைப்பாட்டை டிரம்ப் நிர்வாகம் மீண்டும் ஒருமுறை நிறுவனங்களிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. இதனால் ஹெச்1பி விசா முறையில் அமெரிக்காவில் வேலைக்கு சென்று இருக்கும் இந்தியர்களுக்கும் புதிதாக விசாவிற்கு விண்ணப்பம் செய்திருக்கும் இந்தியர்களுக்கும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
பல்வேறு அமெரிக்க நிறுவனங்களும் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்காமல் முறைகேடாக வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதாக குற்றம் சாட்டி வருகிறது டிரம்ப் அரசு. பொதுவாக அமெரிக்காவில் செயல்படக்கூடிய பல்வேறு நிறுவனங்களும் திறன் வாய்ந்த வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்துவதற்காக ஹெச்1பி விசாவை பயன்படுத்துகின்றன.

இந்த விசா மூலம் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் சென்று தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர் பதவிகளில் வேலை பார்க்க முடிகிறது. இந்த விசா திட்டத்தில் அதிகம் பலனடைவது இந்தியாவை சேர்ந்த டெக் நிபுணர்களாக தான் இருக்கின்றனர். அமெரிக்காவில் இயங்கக்கூடிய ஐடி நிறுவனங்களும் சரி, இந்தியாவில் செயல்படக்கூடிய ஐடி நிறுவனங்களும் சரி, ஊழியர்களை ஆண் சைட்டுக்கு அனுப்புவதற்காக ஹெச்1பி விசாவையே பயன்படுத்துகின்றன.
ஆனால் இந்த விசா திட்டம் தான் அமெரிக்க ஊழியர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி Equal Employment Opportunity Commission (EEOC) என்ற சம வேலைவாய்ப்புக்கான ஆணையம் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தி அறிக்கை அனுப்பியுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக இருக்கும் ஆண்ட்ரியா லுக்கஸ் பல்வேறு தொழில்களிலும் ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதில் அவர்களின் பூர்வீகம் சார்ந்த பாகுபாடு இருப்பதாக கூறியுள்ளார்.
அமெரிக்கர்களுக்கு எதிரான சட்டவிரோத பாரபட்சத்தை அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் இது நாடு முழுவதும் பல்வேறு தொழில்களில் பெரிய அளவிலான பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கர்களை பணிக்கு அமர்த்துவதற்கு பதிலாக பல்வேறு நிறுவனங்களும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்துகின்றனர் என கூறியுள்ளார்.
இது போன்ற சட்டத்தை மீறிய நடவடிக்கைகளை அரசு கண்டறிந்தால் தீவிர நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். குறைந்த சம்பளம் , எளிதாக உழைப்பு சுரண்டலுக்கு ஆளாக்கலாம் உள்ளிட்ட காரணங்கள் தான் பல்வேறு நிறுவனங்களும் அமெரிக்கர்களுக்கு பதிலாக வெளிநாட்டவர்களுக்கு வேலை வழங்க வழி செய்கின்றன என இந்த ஆணையும் குறிப்பிடுகிறது.
இதனிடையே அமெரிக்கா குடியேற்ற துறை ஹெச்1பி விசா திட்டம் அமெரிக்க ஊழியர்களை எதிர்மறையான விதத்தில் பாதிக்கிறது என குறிப்பிட்டுள்ளது. அதாவது இந்த விசாவில் வந்து வேலை செய்யக்கூடிய நபர்கள் அமெரிக்கர்களை விட அதிக ஊதியம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஹெச்1 பி விசாவில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களின் சராசரி சம்பளம் 1 லட்சம் டாலராக இருக்கிறது அதுவே அமெரிக்கர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 45 ,760 டாலராக இருக்கிறது என கூறுகிறது.
இந்நிலையில் டிரம்ப் நிர்வாகம் ஹெச்1பி விசா முறையில் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என சொல்லப்படுகிறது. இது இந்திய டெக் ஊழியர்களை பாதிக்கும்.
Story written: Devika


Click it and Unblock the Notifications