அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு அறிவித்த ரெசிப்ரோக்கல் வரி அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அடுத்த சில வாரத்தில் ரெசிஷன் வரும் என்ற அச்சமும், பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சமும் அந்நாட்டின் பொருளாதார வல்லுனர்களையும், முதலீட்டாளர்களையும் ஆட்டிவித்து வருகிறது. இதனால் அதிரடியாக அறிவித்த வரி அனைத்து அடுத்தடுத்து தளர்த்தி வருகிறார் அதிபர் டிரம்ப்.
இந்த வாரம் மட்டும் டொனால்டு டிரம்ப் 2 பெரிய அந்தர் பல்டி அடித்துள்ளார், முதல் விஷயம் சீனாவைத் தவிர்த்து அனைத்து நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரி விதிப்பை 90 நாட்களுக்கு ஒத்துவித்துவிட்டு, அடிப்படையாக அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீதம் மட்டும் இருக்கும் என அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது ஸ்மார்ட்போன்கள், கம்பியூட்டர்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த ரெசிப்ரோக்கல் வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிப்பதாக அரசு உத்தரவில் கையெழுத்திட்டு உள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம், அமெரிக்காவில் பணவீக்கம் உயராமல் தடுக்கும். அதே வேளையில், ஆப்பிள் மற்றும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் போன்ற முக்கிய எலக்ட்ரானிக் உற்பத்தியாளர்களுக்குப் பெரிய அளவில் நிவாரணம் அளிக்கும். உண்மையில் இதில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு இந்த வரி விலக்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும்.
அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் இந்த வரி விலக்கு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த முடிவு மூலம் ஸ்மார்ட்போன்கள், கம்பியூட்டர்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக் சாதனங்களுக்குச் சீனா மீது விதிக்கப்பட்ட 125 சதவீதம் வரியும், பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 10 சதவீத வரியும் மொத்தமாக நீக்கப்பட உள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், ஹார்ட் டிரைவ்கள், கம்பியூட்டர் பிராசசர் மற்றும் மெமரி சிப்கள் ஆகியவை வரி விலக்கு பெறும். இந்த கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் 100க்கு 99 சதவீதம் அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்பட்டு அந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இதற்கு வரி விதித்தால் அமெரிக்க டிஜட்டல் வர்த்தகம் மொத்தமாக முடங்கும்.
அமெரிக்காவிலேயே இதை தயாரிப்பது தான் டிரம்ப்-ன் நோக்கம், ஆனால் உள்நாட்டு உற்பத்தி வசதிகளை உடனடியாக அமைப்பது என்பது நடக்காத காரியம், அதேபோல் பிற நாட்டு மக்களை போல் அமெரிக்கர்கள் தொழிற்சாலையில் வேகமாக பயணியற்ற முடியாது. மேலும் அமெரிக்காவில் தொழிற்சாலை அமைக்க வேண்டுமாயின் நீண்ட மற்றும் சிக்கலான செயல்முறை உள்ளது. இதனால் டிரம்ப் தனது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.
இதோடு நிற்காமல் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கும் இந்த விலக்கு நீட்டிக்கப்படுகிறது, இது அமெரிக்காவில் ஒரு பெரிய புதிய முதலீட்டை அறிவித்துள்ள தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் மற்றும் பிற செமிகண்டக்டர் உற்பத்தியாளர்களுக்கு ஜாக்பாட் ஆகும். இருப்பினும், இந்த வரி நிவாரணம் எத்தனை மாதம் இருக்கும் என்பது டிரம்ப் அரசு தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications