உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதையின் மிக முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை தற்போது ஈரானால் முடக்கப்பட்டு உலகமே எரிபொருள் உயர்வால் தவித்து வருகிறது. இன்று ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.51 சதவீதம் உயர்ந்து 91.51 டாலராக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானின் அணுசக்தி ஆதாரத்தை அழிக்க வேண்டும் என்ற இலக்குடன் இப்போரை துவங்கியது, ஆனால் தற்போது ஈரானும் சரி, அமெரிக்காவும் சரி ஹார்முஸ் நீரிணையை மொத்தமாக கைப்பற்றுவதில் குறியாய் நிற்கிறது.

ஏற்கனவே ஈரானும், ஓமான் நாடுகளும் ஹார்முஸ் வழித்தடத்தில் எப்படி சரக்கு கப்பல் போக்குவரத்தை நிர்வாகம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை தீட்டியிருக்கும் வேளையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட ஒரு போட்டோ பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
டிரம்ப் எப்படி கிரீன்லாந்து நாட்டையும், வெனிசுலா நாட்டையும் அமெரிக்க பகுதிகளாக அறிவித்து பரபரப்பை கிளப்பினாரோ, அதேபோல் தற்போது ஹார்முஸ் நீரிணையை புதிய அமெரிக்க பகுதியாக அறிவித்து போட்டோவை தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
டிரம்ப் கடந்த ஒரு வாரமாக ஹார்முஸ் நீரிணை பகுதியை அமெரிக்கா கைப்பற்றுவது குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, டிரம்ப் விரைவில் அமெரிக்கா இப்பகுதியை கைப்பற்றலாம் என அறிவித்தார். இதற்கு ஈரான் தரப்பில், ஹார்முஸ் எப்போதும் ஈரானின் பகுதியாகவே இருக்கும் என தெரிவித்து அதிரடியை கிளப்பியது.
இதை தொடர்ந்து திங்கட்கிழமை ஹார்முஸ்-ஐ கைப்பற்றுவது மிகவும் நல்ல யோசனை என கூறி, வெள்ளிக்கிழமை இந்த போட்டோவை வெளியிட்டு உள்ளார். தற்போது ஹார்முஸ்-ஐ அமெரிக்கா தனது கடற்படை முடக்கம் மூலம் கட்டுப்படுத்தி வருகிறது. இதன் நீட்சியாக மொத்த நீரிணையை நாம் கன்ட்ரோலில் எடுக்கலாம்.
இதேவேளையில் ஈரான் இப்பகுதியில் கண்ணிவெடிக்களை வைத்துள்ளது, பில்லியன் டாலர் மதிப்புள்ள கப்பலுக்கு அடியில் கண்ணிவெடி இருப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே விரைவில் இதை நீக்க நடவடிக்களை எடுக்கப்படும். இதுமட்டும் நடந்து முடிந்தால் அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் வளைகுடா பகுதியில் இருந்து கச்சா எண்ணெய் தினமும் பில்லியன் கணக்கான பேரல் வெளியேறும் என தெரிவித்தார்.
டிரம்ப் 2025ல் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து பிற நாடுகளையும், நாட்டின் பகுதிகளையும் அமெரிக்காவுடையது என கூறி வருகிறார். கனடாவை அமெரிக்காவில் 51வது மாவட்டம் என கூறினார். கிரீன்லாந்து நாட்டை ராணுவத்தின் மூலம் கைப்பற்றுவதாக அறிவித்தார். வெனிசுலா நாட்டை ராணுவம் கொண்டு தாக்கி அந்நாட்டின் அதிபரை சிறை பிடித்து அனைத்து எண்ணெய் வளத்தை கைப்பற்றினார்.

இதுமட்டுமா காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி நிர்வாகம் செய்யும் எனவும் அறிவித்தார் டிரம்ப். டிரம்ப் இந்த போட்டோவை வெளியிட்ட அடுத்த 2 மணிநேரத்தில் ஈரான் உடன் எந்த வகையிலும் பேச்சுவார்த்தை இனி இல்லை என திட்டவட்டமாக ட்ரூத் சோஷியல் பதிவின் மூலம் அறிவித்தார். இதேபோல் கடற்படை முற்றுகை தொடரும் எனவும் கூறினார்.
ஆனால் திங்கட்கிழமை தான் டிரம்ப்-ன் மருமகன் Jared Kushner ஈரான் உடன் சாதகமான, நிலையான பேச்சுவார்த்தை நடத்து வருவதாக அறிவித்தார். இதையும் டிரம்ப் தற்போது உடைத்துவிட்டார்.


Click it and Unblock the Notifications

