டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கும் 540 நாள் வொர்க் பர்மீட் நீட்டிப்பை சில முக்கிய பிரிவினருக்கு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் பல இந்தியர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பை இழக்க வேண்டியது மட்டும் அல்லாமல் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையில் இருக்கும் திறன்மிக்க ஊழியர்களுக்கான தட்டுப்பாட்டைக் குறைக்க ஹெச்1பி விசா, எல்1 விசா கீழ் வரும் வெளிநாட்டினரின் படித்த, பட்டம் பெற்ற கணவன் அல்லது மனைவி-க்கு அமெரிக்காவில் வேலை செய்ய வொர்க் பர்மீட் அளிக்கப்பட்டு வந்தது.

இந்த வொர்க் பர்மீட்-ஐ Employment Authorisation Documents (EAD) வாயிலாகக் கொடுக்கப்படும் நிலையில், ஆட்டோமேட்டிக் முறையில் வொர்க் பர்மீட் நீட்டிப்பு முறையை நிறுத்தப்படுவதாகத் தற்காலிக அறிவிப்பைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது.
தற்போது அமெரிக்கக் குடியுரிமை அமைப்பான USCIS இறுதி மற்றும் நிரந்தர உத்தரவாக இந்த ஆட்டோமேட்டிக் 540 நாள் வொர்க் ப்ரமீட் நீட்டிப்பு முறையை சில முக்கிய பிரிவினருக்கு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
யாருக்கெல்லாம் ரத்து செய்யப்படுகிறது என்ற பட்டியலில் ஹெச்4 விசா வைத்துத்துள்ளவர்கள், அமெரிக்காவில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்தவர்கள், அகதிகளாக அமெரிக்காவுக்கு வந்தவர்கள், அமெரிக்காவில் அகதி அந்தஸ்து பெற்றவர்கள், தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து (TPS) பெற்றவர்களுக்கு இந்த ஆட்டோமேட்டிக் முறையில் வொர்க் பர்மீட் நீட்டிப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இத்திட்டம் எப்படி இயங்கியது..? யார் கொண்டு வந்தது..?
H1B விசா வைத்துள்ளவர்களின் கணவன் அல்லது மனைவி H-4 விசாவில் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட்டு, இவர்களுக்கு EAD வாயிலாக வொர்க் பர்மீட் பெற்று அமெரிக்காவில் வேலை செய்யலாம் என்ற முறையை 2015ல் ஒபாமா ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது.
இந்த EAD வொர்க் பர்மீட் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அளிக்கப்படும் என்பதால், மீண்டும் வொர்க் பர்மிட் பெறுவதற்கு, விண்ணப்பம் ஒப்புதல் அளிப்பதில் ஏற்படும் காலதாமதம் போன்ற விஷயத்தால் பலர் வேலைவாய்ப்பை இழந்து வந்தனர். இதனால் அமெரிக்க நிறுவனங்களும் பிரச்சனைகளை எதிர்கொண்டது.
இதை சரி செய்ய 2022ல் ஜோ பைடன் ஆட்சி காலத்தில் ஆட்டோமேட்டிக் வொர்க் பர்மிட் முறை கொண்டு வரப்பட்டது. அதாவது வொர்க் பர்மீட் காலக்கெடு காலாவதியாகும் முன் புதுப்பிக்க விண்ணப்பித்தால், தானாக 540 நாட்கள் (18 மாதங்கள்) நீட்டிப்பு கிடைக்கும் என்ற முறை கொண்டு வரப்பட்டது.
இந்த ஆட்டோமேட்டிக் நீட்டிப்பு முறையின் கீழ் வெளிநாட்டினர் அவர்களின் வேலையை எவ்விதமான தடையுமின்றி தொடர உதவியது. இதனால் ஊழியர்கள் இடையில் வேலையிலிருந்து விடுபட வேண்டியதில்லை.
தற்போது டிரம்ப் அரசு இந்த முறைக்கு மொத்தமாக ரத்து செய்துள்ளது.
இதனால் என்ன பாதிப்பு..?
டிரம்ப் அரசின் புதிய உத்தரவால் ஹெச்4 விசா கீழ் இருக்கும் இந்தியர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். தற்போதைய நிலையில் வொர்க் பர்மீட் இருக்கும் காலம் வரையில் அனைவரும் எவ்விதமான தடையும் இல்லாமல் பணியாற்றலாம், ஆனால் வொர்க் பர்மீட் காலம் முடிந்த பின்பு முன்பு போல் பணியாற்ற முடியாது.
முன்கூட்டியே வொர்க் பர்மிட்-க்காக விண்ணப்பம் செய்தாலும், விண்ணப்பத்தை ஆய்வு செய்யும் காலம் 3 மாதம் வரையில் இருக்கும் காரணத்தால் வேலையை இழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
அடுத்த பிரச்சனை ஒப்புதல் விகிதம் ஏற்கனவே ஹெச்1பி, எல்1 விசா, கிரீன் கார்டு விண்ணப்பங்களில் இந்தியர்களுக்கான ஒப்புதல் விகிதம் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதே நிலை EAD விண்ணப்பத்திற்கும் வரலாம்.
இதனால் மீண்டும் வொர்க் பர்மிட் கிடைக்கும் வரையில் பணியாற்ற முடியாது. இதனால் ஹெச்1பி விசாவில் பணியாற்றும் கணவன் வேலையை இழந்தாலும் ஹெச்4 விசாவில் இருக்கும் மனைவி சப்போர்ட் செய்யும் சூழ்நிலை இனி இருக்காது.
இதேபோல் அமெரிக்காவில் நிலவும் விலைவாசியை குடும்பத்தில் 2 பேர் சம்பாதித்துச் சமாளித்த காலம் மாறி, ஒருவரின் சம்பளத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உருவாகும். இப்படி டிரம்ப்-ன் இந்த ஒரு உத்தரவு மூலம் அமெரிக்காவில் இருக்கும் பல கோடி வெளிநாட்டு ஊழியர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
யாருக்கெல்லாம் பாதிப்பு இல்லை..?
ஆட்டோமேட்டிக் வொர்க் பர்மீட் ரினிவல் முறை மொத்தமாகத் தடை செய்யப்படவில்லை. உதாரணமாக F1 விசா கீழ் வரும் STEM மாணவர்களுக்கு வழங்கப்படும் 180 நாள் ஆட்டோமேட்டிங் முறை தொடர்கிறது. இதேபோல் எல் மற்றும் ஈ பிரிவு விசா கீழ் வரும் வெளிநாட்டவர்களுக்கான வொர்க் பர்மீட்-ல் எவ்விதமான மாற்றமும் செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications

