அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் இன்னும் சில நாட்களில் தனது அதிபர் பதவியில் இருந்து விலக உள்ள நிலையிலும், அமெரிக்காவிற்கு வெளிநாட்டு ஊழியர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஹெச்1பி விசா மற்றும் இதர வேலைவாய்ப்பு விசாக்கள் மீதான தடையை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் நிலையிலும், அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கும் திரும்பி வரும் நிலையிலும், வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் சுகாதாரத்தைக் காப்பாற்றும் வகையில் இந்தத் தடையை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப் அரசு ஏற்கனவே விதிக்கப்பட்டு உள்ள பல்வேறு தடையின் காரணமாக இந்தியாவில் பல லட்சம் பேர் அமெரிக்கச் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில், மீண்டும் டிரம்ப் அரசு 3 மாதம் அதாவது மார்ச் மாதம் வரையில் ஹெச்1பி விசா மற்றும் இதர வேலைவாய்ப்பு விசாக்கள் மீது தடை விதித்துள்ளது.
கடுமையான பாதிப்பு
டிரம்ப் அரசின் இந்த அறிவிப்பால் பல லட்சம் இந்திய ஐடி ஊழியர்கள், பட்டதாரிகள், அமெரிக்காவில் இருக்கும் பல நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள உள்ளது. மேலும் 2021ஆம் ஆண்டுக்கான விசாக்களை அமெரிக்க அரசு அக்டோபர் 1 முதல் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
லாக்டவுன் அறிவிப்பு
அமெரிக்காவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது பல கோடி அமெரிக்க மக்கள் வேவைவாய்ப்புகளை இழந்து, அரசின் நிதியுதவியைப் பெற விண்ணப்பித்து வந்த நிலையில் டிரம்ப் அரசு 2020ஆம் ஆண்டின் ஏப்ரல் 22 மற்றும் ஜூன் 22 ஆகிய தேதிகளில் அறிவித்த இரண்டு முக்கிய உத்தரவின் படி ஹெச்1பி விசா மற்றும் இதர வேலைவாய்ப்பு விசாக்கள் மீது முழுமையான தடை விதிக்கப்பட்டது.
மார்ச் 30 வரை தடை
இந்தத் தடை உத்தரவு டிசம்பர் 31 உடன் முடிவடையும் வேளையில் டிரம்ப் அரசு விசா மீதான தடையை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டித்து உள்ளது. இதனால் ஹெச்1பி மற்றும் இதர வேலைவாய்ப்பு விசா மாசு மார்ச் 31 வரை தடை தொடரும்.
ஜோ பிடன்
இந்நிலையில் 2021 ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் பதவியேற்க உள்ளார். இவரது ஆட்சியில் இந்தியாவுக்குச் சாதகமான அறிவிப்புகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விசா மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது.


Click it and Unblock the Notifications