உலகிலேயே சக்தி வாய்ந்த நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க டாலர் மற்றும் அந்த நாட்டின் பொருளாதாரம். அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய எந்த ஒரு தாக்கமும் உலக பொருளாதாரத்தையே ஆட்டுவிக்கச் செய்யும். கடந்த ஓராண்டு காலமாக உலகமே இதனை அனுபவித்து வருகிறது.
அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய மந்த நிலை உலகமெங்கும் பொருளாதாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவில் வேலை வாய்ப்பின்மை விகிதம் அதிகரித்திருப்பது பணவீக்கம் உயர்ந்திருப்பது உள்ளிட்டவை காரணமாக அந்நாட்டின் மத்திய வங்கி பொருளாதாரத்தை சரிப்படுத்த வட்டி குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக சர்வதேச அளவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல மடங்கு உயர்ந்தது.

அந்த வகையில் அமெரிக்க பொருளாதாரத்தையும் உலக அளவில் தங்கம் , வெள்ளி விலை மற்றும் உலக பொருளாதாரத்தின் போக்கையும் நிர்ணயம் செய்யக்கூடிய மிக முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு அமைப்பாக அமெரிக்க மத்திய வங்கி செயல்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக தற்போது ஜெரோம் பாவெல் செயல்படுகிறார். வரும் மே மாதத்துடன் அவருடைய பதவிக்கால முடிவடைய இருக்கிறது.
தற்போது அவருக்கு பதிலாக புதிய தலைவரை நியமிக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் வந்திருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் பொறுப்பினை கெவின் வார்ஷ் என்பவரிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கெவின் வார்ஷ் இதற்கு முன்பு அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுநராக செயல்பட்டவர்.
டிரம்ப் நாலு பேரை மத்திய வங்கியின் தலைவர் பதவிக்காக தேர்வு செய்துள்ளார். அவர்களில் ஒருவர் பெயரை இன்று அறிவிக்கிறார். இந்திய நேரப்படி நள்ளிரவில் இந்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. முன்னதாக கெவின் வார்ஷ் வியாழக்கிழமை அன்று கூட வெள்ளை மாளிகைக்கு வருகை தந்து டிரம்பை சந்தித்து விட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எனவே கெவின் வார்ஷ் தான் அமெரிக்க மத்திய வங்கி தலைவராக பதவி ஏற்பார் என முதலீட்டாளர்கள் பந்தயம் கட்ட தொடங்கியுள்ளனர். இதனால் பங்கு மதிப்பு சரிந்து, பத்திரங்களின் மதிப்புகள் உயரத் தொடங்கின, அதே போல டாலரின் மதிப்பு வலுவடைந்தது. முன்னதாக டிரம்ப், அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் யார் என்பதை அறிவிக்க இருக்கிறேன் இது அனைவருக்கும் தெரிந்த பெயர் தான் என கூறியிருக்கிறார்.
கெவின் வார்ஷ் இதற்கு முன்பு அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுநர் வாரியத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார். 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை அந்த பதவி வகித்திருக்கிறார். இதற்கு முன்பு டிரம்ப் நிர்வாகத்தின் பொருளாதார கொள்கை குழுவின் ஆலோசகராகவும் செயல்பட்டு இருக்கிறார்.
வரும் மே மாதத்தில் இவர் பதவி ஏற்பார் என சொல்லப்படுகிறது. டிரம்பை பொறுத்தவரை தனக்கு சாதகமாக செயல்படும் ஒரு நபரை தான் அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக நியமிக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார். அந்த வகையில் டிரம்பின் முடிவுகளுக்கு ஏற்ற வகையில் இவர் பொருளாதார கொள்கைகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கெவின் வார்ஷும் வட்டி குறைப்புக்கு ஆதரவானவர் என்றே சொல்லப்படுகிறது. ஒரு வேளை இவர் வட்டி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார் எனும் போது தங்கம், வெள்ளியின் விலை பல மடங்கு உயரும்.


Click it and Unblock the Notifications